search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூன்றாவது மாடியில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் உள்துறை மந்திரி காயம்
    X

    மூன்றாவது மாடியில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் உள்துறை மந்திரி காயம்

    விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை பார்க்கச் சென்ற இடத்தில் மூன்றாவது மாடியில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஆந்திர மாநில உள்துறை மந்திரி காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடா மண்டலம், பெத்தாப்புரம் அருகேயுள்ள கட்டமூரு என்ற கிராமத்தில் கடல் உணவு வகைகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை பதப்படுத்தும் பிரபல தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    நேற்றிரவு வழக்கம்போல் பதப்படுத்தும் பணிகள் நடைபெற்றபோது பின்னிரவு 11.30 மணியளவில் இங்குள்ள அம்மோனியா (நவச்சார) வாயு தொட்டியில் இருந்து திடீரென்று வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால், அங்கு வேலை செய்துகொண்டிருந்த பணியாளர்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். சிலர் மயங்கி கீழே விழுந்தனர்.

    உடனடியாக, வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட பணியாளர்களில் சுமார் 50 பேரை அருகாமையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் பலர் வீடு திரும்பினர். சுமார் 25 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதுதொடர்பான தகவல்கள் வெளியானதும் ஆந்திர மாநில துணை முதல் மந்திரியும், உள்துறை மந்திரியுமான நிம்மக்காயலா சின்னராஜப்பா, விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பார்ப்பதற்காக காக்கிநாடாவில் உள்ள சஞ்சீவி ஆஸ்பத்திரிக்கு இன்று காலை சென்றார்.

    சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர், லிப்ட்டில் ஏறி, கீழே வரும்போது அந்த லிப்ட்டின் கேபிள் ஒயர் இணைப்பு திடீரென்று அறுந்தது.

    இதனால், மூன்றாவது மாடியில் இருந்து தரைத்தளத்தை நோக்கி அசுரவேகத்தில் கீழே இறங்கிய லிப்ட், பயங்கர சப்தத்துடன் தரையில் மோதியது. இச்சம்பவத்தில் உள்துறை மந்திரி சின்னராஜப்பாவுக்கு முதுகுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. விரைந்துவந்த டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    முதுகுப்பகுதியில் அவருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளதா? என்று ஸ்கேன் எடுத்தும் பரிசோதிக்கப்பட்டது. மந்திரியுடன் அவரது பாதுகாவலர் மற்றும் ஒரு வீடியோ கலைஞரும் காயம் அடைந்ததாக தெரியவந்துள்து.

    மந்திரிக்கு காயம் ஏற்பட்ட தகவல் கிடைத்ததும் கிழக்கு கோதாவரி மாவட்ட கலெக்டர், துணை கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்ட் ஆகியோர் சஞ்சீவி ஆஸ்பத்திரிக்கு விரைந்துள்ளதாக ஆந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    Next Story
    ×