search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குண்டுகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல்: காஷ்மீர் எல்லையோரம் 6 வயது சிறுவன் பலி
    X

    குண்டுகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல்: காஷ்மீர் எல்லையோரம் 6 வயது சிறுவன் பலி

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய தாக்குதலில் 6 வயது சிறுவன் பலி மற்றும் பலர் காயமடைந்தனர்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையோரத்தில் ஹிரா நகர் பகுதி கிராமங்களில் வாழ்கிற மக்கள் நிம்மதியும், உறக்கமும் இன்றி பதற்றத்தில் தவித்து வருகின்றனர். எந்த நேரம் பாகிஸ்தான் எப்படி தாக்குதல் நடத்துமோ? என அவர்கள் பீதியில் வாழ்ந்து வருகின்றனர்.       

    இதனால், எல்லைப்பகுதியில் உள்ள குக்கிராமங்களில் அச்சத்தில் தவித்துவந்த மக்களில் சுமார் 400 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டு குண்டு துளைக்க முடியாத வாகனங்கள் மூலம் பாதுகாப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஹிராநகர் பகுதி கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், ஹிராநகர் மற்றும் சான் காத்ரியான் பள்ளிகளில் தற்காலிக முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரா, பர்க்வால், கனாச்சக் உள்ளிட்ட சுமார் 25 பகுதிகளில் உள்ள இந்திய நிலைகளின்மீது நேற்றிரவில் இருந்து பாகிஸ்தான் படைகள் ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்த தாக்குதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரரான அரியானா மாநிலத்தை சேர்ந்த சுஷில் குமார் உயிரிழந்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்த புரி என்ற வீரர் காயமடைந்தார்.

    மேலும், பாகிஸ்தான் படைகள் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி தாக்கியதால் எல்லைப்பகுதி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின்மீது மோர்ட்டார் குண்டு விழுந்ததில் விக்கி என்ற 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது. காயமடைந்த விக்கியின் தந்தை வரிந்தர், தாயார் குனியா தேவி ஆகியோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல், வீட்டுக்குள் மோர்ட்டார் குண்டு விழுந்ததில் டிரேவா பகுதியை சேர்ந்த கிருஷானா தேவி மற்றும் கஜன்சூ பகுதியை சேர்ந்த பிரகாஷோ தேவி ஆகிய இரு மூதாட்டிகளும் மேலும் 6 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் ஆறு பேரும் ஜம்மு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால், எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
    Next Story
    ×