search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெபிட் கார்டு தகவல்கள் திருட்டுக்கு பொறுப்பேற்று எஸ்பிஐ வங்கித்தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ்
    X

    டெபிட் கார்டு தகவல்கள் திருட்டுக்கு பொறுப்பேற்று எஸ்பிஐ வங்கித்தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ்

    எஸ்பிஐ வங்கியின் டெபிட் கார்டு தகவல்கள் திருட்டுக்கு பொறுப்பேற்று அதன் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    புது டெல்லி:

    இந்தியாவில் உள்ள 32 லட்சம் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு தகவல்கள் திருடு போய்விட்டதாக கடந்த வாரம் வெளியான தகவல்கள் வங்கி வாடிக்கையாளர்களை அதிர வைத்தன.இதையடுத்து தகவல் திருடப்பட்டிருக்கும் ஏடிஎம் கார்டுகளை முடக்கும் நடவடிக்கையை வங்கிகள் மேற்கொண்டுள்ளன. உடனடியாக பின் எண்ணை மாற்றும்படியும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.

    தகவல் திருட்டைத் தொடர்ந்து எஸ்பி வங்கி 6 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகளை முடக்கியது. மேலும், முடக்கிய கார்டுகளுக்குப் பதிலாக புதிய கார்டுகள் வழங்கப்படுமென்றும், வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டின் பின் நம்பரை மாற்றும்படியும் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டது.

    இந்நிலையில் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டதற்குப் பொறுப்பேற்று எஸ்பிஐ வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    புது டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் டாம் வடக்கன் இதுகுறித்து கூறுகையில் "நாட்டில் உள்ள 70 லட்சம் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 19 வங்கிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்த தகவல் திருட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய முறைகேடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த திருட்டுகளின் தாயகமாக எஸ்பிஐ வங்கி இருந்துள்ளது. எனவே இந்த திருட்டிற்கு பொறுப்பேற்று எஸ்பிஐ வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா பதவி விலக வேண்டும்" என்றார்.
    Next Story
    ×