search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவம்பர் முதல் வாரத்தில் காங். காரிய கமிட்டி கூடுகிறது: சோனியாவுக்கு பதவி நீடிப்பு வழங்க முடிவு
    X

    நவம்பர் முதல் வாரத்தில் காங். காரிய கமிட்டி கூடுகிறது: சோனியாவுக்கு பதவி நீடிப்பு வழங்க முடிவு

    நவம்பர் முதல் வாரத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது. இதில் சோனியாவுக்கு பதவி நீடிப்பு வழங்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியும், துணைத் தலைவராக ராகுல்காந்தியும் இருந்து வருகிறார்கள். சோனியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

    சமீபத்தில் வாரணாசியில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய சோனியாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. ராகுல்காந்தி உத்தரபிர தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    எனவே சோனியாவுக்கு பதில் ராகுல் காந்திக்கு தலைவர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் ராகுல்காந்தி தலைமை பொறுப்பு ஏற்பார் என்று எதிர்ப்பார்ப்பதாக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை வருகிற நவம்பர் முதல் வாரத்தில் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் என்னென்ன வி‌ஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கூட்டத்தில் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்படுமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. தலைவர் பதவியை பொறுத்தவரை சோனியாவே நீடிப்பார் என்றும் அவருக்கு பதவி நீடிப்பு வழங்கும் வகையில் முடிவு எடுக்கப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதனால் ராகுல்காந்தி தலைவராவது தள்ளிப் போகிறது. என்றாலும் அவருக்கு செயல்தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    இந்த நிலையில் மாநிலத்தில் முக்கிய தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள். எனவே கட்சியை காப்பாற்ற வேண்டிய வி‌ஷயங்கள், தேர்தல் வியூகம் போன்றவை குறித்தும் காரிய கமிட்டி கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
    Next Story
    ×