search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீர் அளவு குறைவது ஏன்?: ஆய்வு செய்ய அதிகாரிகள் ஆந்திராவுக்கு பயணம்
    X

    தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீர் அளவு குறைவது ஏன்?: ஆய்வு செய்ய அதிகாரிகள் ஆந்திராவுக்கு பயணம்

    தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீர் வினாடிக்கு 170 கன அடி மட்டுமே வருகிறது. இதுபோன்று குறைவாக வருவது ஏன்? என ஆய்வு செய்ய அதிகாரிகள் ஆந்திராவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.




    சென்னை:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக, ஆந்திர அரசுகள், 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தை தீட்டின. அதன்படி ஆந்திர அரசு தமிழ்நாட்டுக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை அளிக்க வேண்டும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடவேண்டும்.

    இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 152 கிலோ மீட்டர் தொலைவுக்கு கிருஷ்ணா நதி கால்வாய் வெட்டப்பட்டது.

    இந்த பணிகள் 1983-ம் ஆண்டு தொடங்கி 1996-ம் ஆண்டு வரை நடைபெற்றன. 1996-ம் ஆண்டு முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒப்பந்தப்படி கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை வழங்க வேண்டிய 8 டி.எம்.சி. தண்ணீரில் குறிப்பிட்ட அளவு மட்டும் வழங்கப்பட்ட நிலையில், கண்டலேறு அணை மூடப்பட்டது. ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட கோரி தமிழக அரசு சார்பில் ஆந்திர மாநில அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

    அதனை ஏற்று ஆந்திர மாநில அரசு கடந்த 11-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீரை திறந்து விட்டது. இந்த தண்ணீர் கடந்த 18-ந்தேதி மாலை பூண்டி ஏரியை வந்தடைந்தது. இருந்தாலும் தண்ணீரின் அளவு மிக குறைவாகவே இருந்து வருகிறது.

    இந்தநிலையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினர்.

    இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் ஆந்திர மாநில அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6 முதல் 8 டி.எம்.சி. தண்ணீர் வரை தான் கிடைத்து வருகிறது. மீதம் உள்ள தண்ணீர் வரத்து கால்வாய் உடைப்பு, வெயில் காலங்களில் தண்ணீர் ஆவியாவது, தண்ணீர் திருட்டு போன்ற விரும்பத்தகாத சம்பவங்களால் தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது.

    இதுகுறித்து திருப்பதியில் ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து ஆய்வு செய்யப்பட்டு, தகவல்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் தற்போதைய சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டமும், நிலையும் எடுத்து கூறப்பட்டது.

    வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்துவிட்டால், குடிநீருக்கு நாம் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் பருவமழை இந்த ஆண்டு பொய்த்துவிட்டால் குடிநீருக்கு முழுவதும் கிருஷ்ணா தண்ணீரை தான் நாம் நம்பியிருக்க வேண்டியது வரும். எனவே தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை முறையாக திறந்து, பூண்டிக்கு வந்து சேரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர மாநில அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    தற்போது வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஆனால் பூண்டி ஏரிக்கு 170 கன அடி வீதம் தான் தண்ணீர் வருகிறது. திறந்துவிடப்படும் தண்ணீர் முழுவதுமாக பூண்டிக்கு வந்து சேரும் வகையில் உடைந்த வரத்து கால்வாய்களை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆந்திர மாநில அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

    Next Story
    ×