search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் பதற்றம் - எல்லையோர கிராம மக்கள் வெளியேற்றம்
    X

    பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் பதற்றம் - எல்லையோர கிராம மக்கள் வெளியேற்றம்

    பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்களால் பதற்றம் ஏற்பட்டிருப்பதால், எல்லையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
    ஹிராநகர்:

    பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்களால் பதற்றம் ஏற்பட்டிருப்பதால், எல்லையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

    காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முகாம்கள் அமைத்து, இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த சதிசெய்து கொண்டிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் கடந்த மாதம் 28-ந்தேதி நள்ளிரவு அதிரடியாக துல்லிய தாக்குதல்கள் நடத்தியது. இதில் 38 பயங்கரவாதிகளும், 2 சிப்பாய்களும் கொல்லப்பட்டனர்.

    இதில் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களாக கத்துவா மாவட்டம், ஹிரா நகர் பகுதியில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் பீரங்கிகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் தொடர் தாக்குதல் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 6 முறை சண்டை நிறுத்தம் மீறப்பட்டது.

    நமது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சரியான பதிலடி கொடுத்தனர். இதில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் 7 பேரும், ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர்.

    இப்படி பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையோரத்தில் ஹிரா நகர் பகுதி கிராமங்களில் வாழ்கிற மக்கள் 2 நாட்களாக நிம்மதியும், உறக்கமும் இன்றி பதற்றத்தில் தவித்தனர். எந்த நேரம் பாகிஸ்தான் எப்படி தாக்குதல் நடத்துமோ என தெரியாமல் அவர்கள் கவலைப்பட்டனர்.

    இந்த நிலையில், அங்கு போபியா உள்ளிட்ட குக்கிராமங்களில் அச்சத்தில் தவித்து வந்த மக்கள் 400 பேர் நேற்று பத்திரமாக வெளியேற்றப்பட்டு குண்டு துளைக்க முடியாத ‘புல்லட் புரூப்’ வாகனங்கள் மூலம் பாதுகாப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இதுபற்றி கத்துவா பகுதி துணை கமிஷனர் ரமேஷ் குமார், செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசும்போது, “கடந்த 2 நாட்களாக நடந்து வந்த தொடர் துப்பாக்கிச்சூடு, பீரங்கி தாக்குதலால் எல்லையோர மக்கள் அச்சத்தில் தவித்தனர். அவர்களை ‘புல்லட் புரூப்’ வாகனங்கள் மூலம் அங்கிருந்து வெளியேற்றி உள்ளோம்” என கூறினார்.

    ஐம்மு எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி., உபாத்யாயா, “எல்லை பகுதியில் துப்பாக்கிச்சூடும், பீரங்கி தாக்குதலும் அதிகரித்து வருவதால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளோம்” என கூறினார்.

    ஹிராநகர் பகுதி கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், ஹிராநகர் மற்றும் சான் காத்ரியான் பள்ளிகளில் முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள போபியாவை சேர்ந்த மானக்சந்த் என்பவர், “இந்த முறை பாகிஸ்தானின் தொடர் தாக்குதல்களால் நாங்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனோம்” என குறிப்பிட்டார். இதேபோன்று பலரும் தங்களது அனுபவங்களை வேதனையுடன் பகிர்ந்து கொண்டனர்.

    பாகிஸ்தான் படையினர் 7 பேரை நமது எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற நிலையில், எல்லை நிலவரம் குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லியில் நேற்று உயர் மட்டக்குழு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

    இதில் பங்கேற்ற உள்துறை ராஜாங்க மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆஹிர் கூறும்போது, “ சண்டை நிறுத்தத்தை மீறுவோருக்கு சரியான பதிலடி தருமாறு எல்லை பாதுகாப்பு படையினருக்கும், பிற துணை ராணுவத்தினருக்கும் தெளிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

    இதற்கிடையே எல்லையில் இந்திய தரப்பில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 
    Next Story
    ×