search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகள் கொலுசு அணிய தடை; தலைமுடியை கட்டவும் உத்தரவு
    X

    திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகள் கொலுசு அணிய தடை; தலைமுடியை கட்டவும் உத்தரவு

    திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகள் கொலுசு அணிந்து வரக்கூடாது, தலைமுடியை விரித்து போடாமல் முடிந்து கட்டியிருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கும்போது, மாணவ- மாணவிகளுக்கு நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து அறிவுரைகள் வழங்கும்.

    கல்லூரி தொடங்கிய பின்பு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் மாணவ- மாணவிகள் பின்னர் அதனை கண்டு கொள்வதில்லை என்று கல்லூரி நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன.

    குறிப்பாக மாணவர்கள் பலரும் ஜீன்ஸ் அணிந்து கல்லூரிக்கு வருவதாகவும், சிலர் அணியும் ஜீன்ஸ், பல மாதங்களாக துவைக்காத ஜீன்ஸ் என்றும் கல்லூரி முதல்வருக்கு பல்வேறு தரப்பில் இருந்து புகார் கூறப்பட்டது.

    இதுபோல கல்லூரியில் பல்வேறு ஒழுங்கீனங்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கல்லூரி நிர்வாகத்தை வலியுறுத்தினர்.

    இதையடுத்து கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்குள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக 18 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் கல்லூரி நிர்வாகிகள் கல்லூரியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த 21-ந்தேதி கூடி ஆலோசனை நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறைத்தலைவர்கள், மூத்த பேராசிரியர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில், மருத்துவக்கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாட்டை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, மாணவர்கள் ஜீன்ஸ், டீ-சர்ட், கேஸ்வல் ஆடைகள் அணிந்து வகுப்புக்கு வரக்கூடாது. ‘பார்மல் டிரஸ்’ அணிந்து ‘டாக்டர் கோட்’ போட்டப்படியே வகுப்புக்கு வர வேண்டும்.

    மாணவிகள் லெக்கின்ஸ் மற்றும் இறுக்கமான உடை அணிந்து வகுப்புக்கு வரக்கூடாது. ஒலி எழுப்பும் கொலுசு போன்ற ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது. தலைமுடியை விரித்து போடாமல் முடிந்து கட்டியிருக்க வேண்டும். காலில் சப்பல் அணியக்கூடாது. சுடிதார், சேலை அணிந்து அதன் மீது ‘டாக்டர் கோட்’ போட்டப்படியே வகுப்புக்கு வரவேண்டும். இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வர் பெயரில் சுற்றறிக்கையாக வெளியிடப்பட்டது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டது.

    மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு குறித்து கல்லூரியின் மாணவர் பேரவை தலைவர் ஜிபின் கூறியதாவது:-

    கல்லூரியில் ஆடை கட்டுப்பாடு குறித்து ஆலோசிக்க நடந்த கூட்டத்திற்கு, எனக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அன்று எனக்கு முக்கியமான வேறு பணி இருந்ததால், கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவு ஏற்கனவே அமலில் உள்ளதுதான். பொதுவாக இந்த முடிவு நல்லதுதான் என்று சில மாணவர்கள் கூறினர். அதே நேரம் இந்த கட்டுப்பாட்டை கடைபிடிப்பது சாத்தியமில்லை என்றும் சில மாணவர்கள் தெரிவித்ததாக கூறினார்.

    இந்திய மாணவர் சங்க செயலாளர் அமல் கூறும் போது, இத்தகைய கட்டுப்பாடுகள் ஏற்கனவே கூறப்பட்டதுதான். இப்போதுதான் அதனை சுற்றறிக்கையாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு மாணவர்கள் தாடி வைக்கக்கூடாது என்பதற்காக சுற்றறிக்கை விடப்பட்டது. மருத்துவக்கல்லூரி மாணவர்கள் செய்முறை பயிற்சிக்கு செல்லும்போது, இப்போது கூறப்பட்ட ஆடை கட்டுப்பாடு அவசியமானதாகவே கருதுகிறோம் என்றார்.
    Next Story
    ×