search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் கார்டில் அகிலேஷ் யாதவ் படம்: நீக்காவிடில் தேர்தல் கமிஷன் செல்வோம்- பா.ஜனதா மிரட்டல்
    X

    ரேஷன் கார்டில் அகிலேஷ் யாதவ் படம்: நீக்காவிடில் தேர்தல் கமிஷன் செல்வோம்- பா.ஜனதா மிரட்டல்

    உத்தர பிரதேசத்தின் முதல்வர் அகிலேஷ் யாதவ் படம் ரேஷன் கார்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதை நீக்காவிடில் தேர்தல் கமிஷன் செல்வோம் என்று பா.ஜனதா மிரட்டல் விடுத்துள்ளது.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலையொட்டி தற்போதிலிருந்தே   அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான வேலைகளை தொடங்கி விட்டன.

    காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்தை அறிவித்து பிரசாரத்தை தொடங்கிவிட்டது. பா.ஜனதாவும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. ஆளும் சமாஜ்வாடி கட்சியில் மட்டும் குழப்பம் நிலவி வருகிறது. அந்த கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவிற்கும், அவரது மகனும், தற்போதைய முதல்வரும் ஆன அகிலேஷ் யாதவிற்கும் இடையே பூசல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் அகிலேஷ் யாதவிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள ரேசன் கார்டுகளில் முதல்வரான அகிலேஷ் யாதவின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இது தற்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற தேர்தலில் ஆதாயம் தேடித்தான் இந்த முறையை அகிலேஷ் யாதவ் கையாண்டுள்ளார். படத்தை நீக்காவிடில் தேர்தல் கமிஷனை நாடுவோம் என்று பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

    இதுகுறித்து பா.ஜனதா கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவர் கேஷவ் பிரசாத் மயூரா கூறுகையில் ‘‘ரேசஷன் கார்டில் அகிலேஷ் யாதவின் படத்தைப் பார்த்து மக்கள் மிகவும் கோபத்திற்குள்ளாகியுள்ளனர். இது ஒரு மலிவான தேர்தல் விளம்பரம். அரசு அகிலேஷ் யாதவின் படத்தை நீக்காவிடில், இந்த விஷயத்தை நாங்கள் தேர்தல் கமிஷன் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலுக்காக மக்களை கவரும் ஒரு திட்டம்தான் இது’’ என்றார்.

    ஆனால், இந்த விவாகரம் குறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் ‘‘ரேஷன் கார்டு பை அல்லது ரேசன் கார்டில் முதல் அமைச்சரின் படம் ஏன் பொறிக்க வேண்டும் கேள்வி கேட்கலாம். நாம் ஏழை மக்களுக்கு உதவி செய்தால், அதில் சில விளம்பரங்கள் இருக்கும். நமக்காக யார் உதவி செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்காக மக்களுக்கு இது மிகவும் முக்கியமானது’’ என்று நியாயப்படுத்தினார்.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கூறுகையில் ‘‘ரேஷன் கார்டில் முதல்வர் படத்தை வைத்திருக்கக் கூடாது. இது தேர்தலை கணக்கில் வைத்து செய்யப்பட்டதாகும்’’ என்றது.
    Next Story
    ×