search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார் ரீட்டா பகுகுணா: ராகுல் மீது தாக்கு
    X

    அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார் ரீட்டா பகுகுணா: ராகுல் மீது தாக்கு

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரீட்டா பகுகுணா இன்று காங்கிரசில் இருந்து விலகி அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கிய காங்கிரஸ் கட்சி, முதலமைச்சர் வேட்பாளராக ஷீலா தீட்சித்தை அறிவித்தது. இதனால் மாநில முன்னாள் தலைவரான ரீட்டா பகுகுணா ஜோஷி கடும் அதிருப்தி அடைந்தார். இதன் காரணமாக அவர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியானது.

    ரீட்டாவின் சகோதரரும் உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சருமான விஜய் பகுகுணா சில மாதங்களுக்கு முன் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அதன்பின்னர் ரீட்டாவுக்கும் காங்கிரசில் இருந்த இணக்கம் குறையத் தொடங்கியது. ராஜ்பப்பர் மாநில தலைவராக பொறுப்பேற்றது அவர் ஓரங்கட்டப்பட்டதாகவும் தெரிகிறது.

    இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ரீட்டா பகுகுணா இன்று காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார். பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா முன்னலையில் அவர் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்.

    இதுபற்றி ரீட்டா பகுகுணா கூறுகையில், “பா.ஜ.க.வில் இணைவதற்காக நான் காங்கிரசில் இருந்து விலகினேன். சமீபகாலமாக நடந்த நிகழ்வுகள் என்னை காயப்படுத்தி விட்டன. சர்ஜிகல் தாக்குதல் குறித்த காங்கிரசின் கருத்து கண்டிக்கத்தக்கது. அதற்கு எப்படி ஆதாரம் கேட்கமுடியும்?

    24 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தேன். ஆனால், அந்த தனிச்சிறப்பை காங்கிரஸ் இழந்துவிட்டது. ராகுல் காந்தியின் தலைமை மக்கள் ஏற்கக்கூடிய தலைமை அல்ல. காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி எங்களை அழைத்து குறைகளை கேட்பார். ஆனால் ராகுல் காந்தி கேட்பதில்லை. சீர்கேடான ஆட்சி நடத்தும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளிடம் இருந்து உத்தர பிரதேசத்தை விடுவிக்க விரும்புகிறேன்” என்றார்.

    மேலும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் செயல்பாடுகளையும் அவர் பாராட்டினார்.

    67 வயதான ரீட்டா பகுகுணா, தற்போது லக்னோ கண்டோன்மென்ட் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
    Next Story
    ×