search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளம் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி: உள்துறை எச்சரிக்கை
    X

    நேபாளம் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி: உள்துறை எச்சரிக்கை

    நேபாளம் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளும், பாகிஸ்தான் ராணுவமும் அடிக்கடி இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன.

    கடந்த மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாமுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த மாத இறுதியில் இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சுமார் 10கி.மீ. தூரத்துக்கு சென்று அதிரடி தாக்குதல் நடத்தியது. அதில் சுமார் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்துள்ள லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்பு முகம்மது மற்றும் முஜாகிதீன் தீவிரவாதிகள் ஒன்றிணைந்து இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியுள்ளனர். இதையடுத்து காஷ்மீர் எல்லை நெடுக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    எல்லையில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் திட்டமிட்டபடி இந்தியாவுக்குள் ஊடுருவ முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளின் கவனம் மாற்றுப்பாதைக்கு திரும்பி உள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருவது ஒன்றுதான் வாய்ப்பாக உள்ளது. எனவே பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பல்வேறு குழுக்கள் நேபாளத்துக்குள் வந்துள்ளது.

    இதை இந்திய உளவுத்துறை சமீபத்தில் கண்டறிந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கொடுத்தன. இதைத் தொடர்ந்து நேபாளம் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நேபாளத்தில் மிகச்சிறந்த ஒருங்கிணைப்பு நெட்வொர்க் உள்ளது. எனவே அவர்களால் இந்தியாவுக்குள் எளிதாக ஊடுருவ முடியும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.

    அதை முறியடிக்க நேபாளம் எல்லையை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை கொடுக்குமாறு உள்துறை அமைச்சகம் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே எல்லைப்பகுதிக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பவும் உள்துறை உத்தரவிட்டுள்ளது.

    அதன்பேரில் நேபாள எல்லைக்கு டெல்லியில் இருந்து கமாண்டோ படை பிரிவு ஒன்று விரைந்துள்ளது. மேலும் உள்ளூர் போலீசாரும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×