search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடிக்கணக்கில் மோசடி: பத்மபூஷன் விருது பெற்ற பில்லியர்ட்ஸ் சாம்பியன் கைது
    X

    கோடிக்கணக்கில் மோசடி: பத்மபூஷன் விருது பெற்ற பில்லியர்ட்ஸ் சாம்பியன் கைது

    எம்.எல்.எம். வர்த்தகம் மூலம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன் மைக்கேல் பெரைரா உள்ளிட்ட 4 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.
    ஐதராபாத்:

    எம்.எல்.எம். வர்த்தகம் மூலம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன் மைக்கேல் பெரைரா உள்ளிட்ட 4 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.

    ஹாங்காங்கை மையமாக கொண்ட ‘கியூநெட்’ என்ற நிறுவனம் இந்தியாவில் மல்டி-லெவல் மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்.) என்ற பெயரில் வேலை வழங்குவதாக ஆட்களை சேர்த்தது. கியூநெட்டின் முக்கியமான இந்திய கிளையாக ‘விகான் டைரக்ட் செல்லிங் இந்தியா பிரைவெட் லிமிடெட்’ என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது.

    இந்த கிளை நிறுவனத்தில் முன்னாள் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் மைக்கேல் ஜோசப் பெரைரா (வயது 78) உள்ளிட்டோர் இயக்குனர்களாகவும், பங்குதாரர்களாகவும் செயல்பட்டு வந்தனர். மைக்கேல் பெரைரா இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றவர் ஆவார்.

    இந்த நிறுவனம் சாப்ட்வேர் என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்ளிட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை ஆன்-லைன் வர்த்தகத்தில் சேர்த்துக்கொள்வதாக கூறி, கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து வந்துள்ளது. அந்தவகையில் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் வங்கி ஒன்றின் துணை மேலாளரான சுமன் கோஷ் என்பவர் இந்த நிறுவனத்தில் ரூ.16 லட்சம் செலுத்தியும், அவருக்கு எந்தவித வர்த்தகமும் வழங்கப்படவில்லை.

    இது குறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந் தேதி சுமன் கோஷ் ஐதராபாத் போலீசில் புகார் செய்தார். மேலும் விகான் நிறுவனம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவுக்கும் பல்வேறு புகார்கள் வந்தன. இந்த புகார்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வந்தது.

    அப்போது ‘கியூநெட்’ நிறுவனத்தின் பல்வேறு கிளை நிறுவனங்கள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வந்ததும், அங்கும் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக ஏராளமான புகார்கள் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஐதராபாத்தில் மட்டுமே 60-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் விகான் நிறுவனத்தின் இயக்குனர்களான மைக்கேல் ஜோசப் பெரைரா, மால்கம் என்.தேசாய், எம்.வி.பாலாஜி, சீனிவாஸ் ராவ் ஆகிய 4 பேரை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றக்காவலில் வைத்திருப்பதாக ஐதராபாத் போலீசாருக்கு கடந்த 8-ந் தேதி தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அந்த 4 பேரையும் ஐதராபாத் கொண்டு சென்று விசாரிக்க அனுமதி அளிக்குமாறு மும்பை கோர்ட்டில் ஐதராபாத் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அந்த 4 பேரையும் ஐதராபாத்துக்கு அழைத்து வந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் முறைப்படி கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் ஐதராபாத் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு 4 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு 24-ந் தேதி (திங்கட்கிழமை) வரை தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்த தகவல் தங்களுக்கு வாய்மொழியாக கிடைத்துள்ளதாக கூறிய மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜி.ஜோகையா, ஆனால் இதை எதிர்த்தும், கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியும் நாங்கள் மனுத்தாக்கல் செய்வோம் என்றும் தெரிவித்தார். 
    Next Story
    ×