search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுவிலக்கு சட்டம்: பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
    X

    மதுவிலக்கு சட்டம்: பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

    பீகாரில் மதுவிலக்கு சட்டம் செல்லாது என்ற பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
    புது டெல்லி:

    பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார் சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். அதன்படி பதவி ஏற்றதும் ஏப்ரல் மாதம் முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. மது விற்பனை மற்றும் மது அருந்துவதை தடை செய்யும் கடுமையான இந்த சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து மது விற்பனை மற்றும் மது கடத்தலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பீகார் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கடுமையான மதுவிலக்கு சட்டத்தை நீக்கக்கோரி பாட்னா உயர்நீதிமன்றத்தில் மது விற்பனை சங்கம் மற்றும் தனிநபர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி இக்பால் அகமது அன்சாரி, நீதிபதி நபநிதிபிரசாத் சிங் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணை மே 20-ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த வழக்கின் மீதான தீர்ப்பு கடந்த 30-ம் தேதி வெளியானது. உயர்நீதிமன்ற தீர்ப்பில் மது அருந்துதல் மற்றும் விற்பனையை தடை செய்வது தொடர்பாக பீகார் அரசு கொண்டுவந்த அறிவிப்பாணையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும் பூரண மது விலக்கு சட்டம் சட்டவிரோதம் என்றும், இதனை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தீர்ப்பளித்தனர். இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு மேல்முறையீடு செய்தது.

    இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் பீகாரில் மதுவிலக்கு சட்டம் செல்லாது என்ற பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
    Next Story
    ×