search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்கியதன் மூலம் நமது வீரர்கள் இந்தியாவை பெருமைப்படுத்தி விட்டனர்: ராஜ்நாத் சிங் பெருமிதம்
    X

    பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்கியதன் மூலம் நமது வீரர்கள் இந்தியாவை பெருமைப்படுத்தி விட்டனர்: ராஜ்நாத் சிங் பெருமிதம்

    எல்லைதாண்டி பாகிஸ்தான் மண்ணுக்குள் நுழைந்து தீவிரவாதிகளை தாக்கிக் கொன்றதன் மூலம் நமது வீரர்கள் இந்தியாவை பெருமைப்படுத்தி விட்டனர் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    எல்லைக்கோட்டை தாண்டிச்சென்று பாகிஸ்தான் மண்ணுக்குள் புகுந்து அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளை துவம்சம்செய்து திரும்பியுள்ள இந்திய ராணுவ வீரர்களின் சாகசத்தை கண்டு நிலைகுலைந்துப்போய் இருக்கும் பாகிஸ்தான், அப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என பொய்யான தகவலையே திரும்பத்திரும்ப கூறி வருகிறது.

    இருப்பினும், இந்திய ஊடகங்களில் வரும் செய்திகளை மேற்கோள் காட்டி நவாஸ் ஷரிப் தலைமையிலான அரசை அங்குள்ள எதிர்க்கட்சியினர் வறுத்து எடுத்து கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே, உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று பேசிய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து கோமா நிலையில் பாகிஸ்தான் உள்ளதாக குறிப்பிட்டார்.

    அப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என்று புளுகிவரும் பாகிஸ்தானின் பொய் பிரசாரத்துக்கு பதிலளித்த மனோகர் பரிக்கர், ஆபரேஷன் செய்யப்பட்டதுகூட தெரியாமல் மயக்க மருந்து செலுத்தப்பட்ட நோயாளி போல பாகிஸ்தான் கிடக்கிறது. தாக்குதல் நடந்து 2 நாட்கள் கடந்த பின்பும் என்ன நடந்தது? என்பதுகூட தெரியாமல் எந்த முடிவும் எடுக்க முடியாமல் பாகிஸ்தான் திணறுகிறது என்றும் அவர் கூறினார்.

    இந்நிலையில், எல்லைதாண்டி பாகிஸ்தான் மண்ணுக்குள் நுழைந்து தீவிரவாதிகளை தாக்கிக் கொன்றதன் மூலம் நமது வீரர்கள் இந்தியாவை பெருமைப்படுத்தி விட்டனர் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

    தலைநகர் டெல்லியில் இன்று பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிப்பறைகளை திறந்துவைத்த ராஜ்நாத் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், ‘பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய வீரர்கள் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் காட்டிய வீரதீரச்செயலை ஒட்டுமொத்த உலக நாடுகளும் அறிந்துள்ளன. இந்த தாக்குதலில் மூலம் நமது வீரர்கள் இந்தியாவை பெருமைப்படுத்தி உள்ளனர்’ என குறிப்பிட்டார்.

    இந்த தாக்குதலை மறுத்துவரும் பாகிஸ்தான், தாக்குதல் தொடர்பான வீடியோவை ஏன் வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பியும் வருகிறதே.., என்ற நிருபரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘கொஞ்சம் பொறுத்திருந்துப் பாருங்கள்’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×