search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேஸ்புக்கில் வெளியான படத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அச்சுதானந்தன் சந்தித்த காட்சி.
    X
    பேஸ்புக்கில் வெளியான படத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அச்சுதானந்தன் சந்தித்த காட்சி.

    காங்கிரசார் போராட்டத்துக்கு அச்சுதானந்தன் ஆதரவா?: பேஸ்புக்கில் வெளியான படத்தால் பரபரப்பு

    கேரளாவில் கல்விக்கட்டண உயர்வை கண்டித்து காங்கிரசார் நடத்தும் போராட்டத்துக்கு முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் ஆதரவு அளித்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி கட்டணம் திடீரென அதிகரிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்விக் கட்டண உயர்வுக்கு கேரள கம்யூனிஸ்டு அரசு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து உள்ளதாக இளைஞர் காங்கிரசார் குற்றம் சாட்டி உள்ளனர்.

    மாநில அரசை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமைச் செயலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

    மேலும் தலைமை செயலகம் பகுதியில் காங்கிரசார் மறியல் போராட்டங்களும் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவதும் அது தடியடி, கண்ணீர் புகை வீச்சு என்று பரபரப்பில் முடிவதுமாக உள்ளது.

    இந்த நிலையில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அச்சுதானந்தன் நேற்று தனது காரில் கேரள அரசு தலைமைச் செயலகத்திற்கு சென்றார். அப்போது அங்கு காங்கிரசார் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

    உடனே அச்சுதானந்தன் காரில் இருந்து இறங்கி தலைமை செயலக பிரதான வாசலை நோக்கி நடந்துச்சென்றார்.

    அப்போது போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஹெபிஈடன், ஷாபி பரம்பில், அனுப்ஜோசப் மற்றும் நிர்வாகிகள் அச்சுதானந்தனை வரவேற்று அவரது கைகளை பிடித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    அச்சுதானந்தனும் காங்கிரசார் வாழ்த்துக்களை ஏற்றபடி சிறிது நேரம் அவர்களிடம் பேசி விட்டு தலைமைச்செயலகத்திற்கு சென்று விட்டார்.

    இதற்கிடையில் அச்சுதானந்தன்- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்த புகைப்படத்தை ஹெபிஈடன் எம்.எல்.ஏ. தனது பேஸ்புக்கில் வெளியிட்டார். இதைப் பார்த்ததும் எதிர் கட்சியான காங்கிரசார் போராட்டத்திற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த அச்சுதானந்தன் ஆதரவு தெரிவித்தது போன்ற பரபரப்பு ஏற்பட்டது.

    ஒரு மணி நேரத்தில் இந்த படத்திற்கு 11 ஆயிரம் பேர் வரவேற்பு தெரிவித்தனர். 1700 பேர் இந்த படத்தை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். ஏராளமானோர் இந்த படம் பற்றி தங்கள் கருத்துக்களையும் தெரிவித்து இருந்தனர்.

    இந்த அரசியல் பரபரப்புக்கு காங்கிரஸ் தரப்பிலோ, கம்யூனிஸ்டு தரப்பிலோ யாரும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×