search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பினார் துணை ஜனாதிபதி
    X

    ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பினார் துணை ஜனாதிபதி

    ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி இன்று நாடு திரும்பினார்.
    புதுடெல்லி:

    ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி இன்று நாடு திரும்பினார்.

    துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி 5 நாட்கள் பயணமாக ஆப்பிரிக்காவின் நைஜீரியா மற்றும் மாலி ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அவருடன், அவரது மனைவி சல்மா அன்சாரி, மத்திய நிதித்துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால், எம்.பி.க்கள் புவனேஸ்வர் கலிதா, திலிப் குமார் திர்கே மற்றும் முகமது சலிம் மற்றும் மூத்த அதிகாரிகள் சென்றனர்.

    முதலில் நைஜீரியா சென்ற துணை ஜனாதிபதி அன்சாரி தலைநகர் அபுஜாவில் நைஜீரிய அதிபர் முகமது புகாரி, துணை அதிபர் ஏமி ஒசின்பஜோ ஆகியோரை சந்தித்து பேசினார். நைஜீரிய மற்றும் இந்திய தொழில் நிறுவன நிர்வாகிகள் மற்றும் இந்தியர்களை சந்தித்து உரையாடினார். தேசிய ராணுவ கல்லூரியிலும் உரையாற்றினார்.

    அங்கிருந்து நைஜீரியாவின் மிகப்பெரிய நகரமான லாகோஸ் சென்ற அவர், லாகோஸ் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தினார். நைஜிரியாவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானதுடன், பாதுகாப்பு, ராணுவம், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    அங்கிருந்து மாலி சென்ற அன்சாரி, தலைநகர் பமாக்கோவில் உள்ள தேசிய சபையில் உரையாற்றினார். அதிபர், பிரதமர் மற்றும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார். பிரதமருடன் மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் பங்கேற்றார்.

    இதுதவிர இந்தியா-மாலி இடையே கலாச்சார பரிமாற்றம் உள்ளிட்ட 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.

    இந்நிலையில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து அன்சாரி மற்றும் அவருடன் சென்ற குழுவினர் இன்று டெல்லி திரும்பினர். இந்த பயணம் மிகவும் திருப்திகரமாக இருந்ததாக அன்சாரி குறிப்பிட்டார். கடந்த ஆண்டு இந்தியா-ஆப்பிரிக்கா மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பல கருத்துக்களின் அடிப்படையில் இந்த சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
    Next Story
    ×