search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்துக்கு எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க புதிய உத்தரவு
    X

    கர்நாடகத்துக்கு எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க புதிய உத்தரவு

    காவிரி விவகாரத்தில் உத்தரவுகளை பின்பற்றாத கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புது டெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளின் கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தலைமையில் இரு மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்ட சமரச கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.

    தமிழகம், கர்நாடகம் என இரண்டு தரப்பினரும் மாறி, மாறி தங்கள் தரப்பு கருத்துக்களை எடுத்துரைத்தனர். எனினும் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டதால் தீர்வு எதுவும் எட்டப்படாமல் இந்தக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

    இந்நிலையில், காவிரி விவகாரத்தில் விவாதிக்கப்பட்டது குறித்த அறிக்கையை மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. மத்திய அரசின் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், அக்டோபர் 4-க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. வாரியத்தில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என்றும் நாளை மாலை 4 மணிக்குள் 4 மாநில அரசுகள் நிபுணர்கள் பெயரை தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

    மேலும் நாளை முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை தமிழகத்துக்கு 6000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம், காவிரி விவகாரத்தில் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசுக்கு இதுவே இறுதி எச்சரிக்கை என கண்டனம் தெரிவித்தது.

    மேலும் 144 பிரிவின்படி நீதிமன்ற உத்தரவை அரசுகள் பின்பற்ற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
    Next Story
    ×