search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது: டெல்லி காவிரி நீர் ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா பேச்சு
    X

    தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது: டெல்லி காவிரி நீர் ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா பேச்சு

    தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாத நிலையில் கர்நாடகம் இருப்பதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா டெல்லியில் நடந்த காவிரி நீர் ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான காவிரி நீரை திறந்து விட உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல் செய்தது.

    இந்த வழக்கில் காவிரியில் கடந்த 27-ந்தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுத்து விட்டது.

    நேற்று முன்தினம் இந்த வழக்கில் தொடர்ந்து 30-ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து டெல்லியில் இன்று தமிழக - கர்நாடக அரசுகளின் பேச்சு வார்த்தைக்கு மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது. அதன்படி இன்று காலை டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தலைமையில் காவிரி நீர் பங்கீடு தொடர்பான சமரச கூட்டம் நடந்தது.

    இதில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில் நுட்ப பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உரை வாசிக்கப்பட்டது.

    கர்நாடகம் சார்பில் முதல்-மந்திரி சித்தராமையா, நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி. பட்டீல், தலைமைச் செயலாளர் அரவிந்த் ஜாதவ் உள்ளிட்ட 5 பேர் குழு பங்கேற்றது.

    கூட்டத்தில் காவிரி நீர் பங்கீடு பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பது குறித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பேசுகையில், “தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாத நிலையில் கர்நாடகம் இருக்கிறது. 2015-16-ம் நீர் பருவ ஆண்டு மிக மோசமாக உள்ளது. உண்மை நிலையை கண்டறிய மத்திய அரசு நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும். தமிழகத்திற்கு நீர் திறந்தால் கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றார்.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு நாளை சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு விசாரணைக்கு பின் தாக்கல் செய்யப்படும்.

    முன்னதாக மாநில பிரதிநிதிகளை வரவேற்ற மத்திய மந்திரி உமா பாரதி முதல்-மந்திரி சித்தராமையாவையும், தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் கையைப் பிடித்து ஒருவருக்கொருவர் கை குலுக்க வைத்தார்.
    Next Story
    ×