search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்.ஐ.வி. பாதித்த மனைவியின் பராமரிப்பு செலவை ஏற்க வேண்டியது கணவரின் கடமை: தானே கோர்ட்டு உத்தரவு
    X

    எச்.ஐ.வி. பாதித்த மனைவியின் பராமரிப்பு செலவை ஏற்க வேண்டியது கணவரின் கடமை: தானே கோர்ட்டு உத்தரவு

    எச்.ஐ.வி. பாதித்த மனைவியின் மாதாந்திர பராமரிப்பு செலவை ஏற்க வேண்டியது கணவரின் கடமை என்று தானே கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
    தானே:

    மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் கலம்பொலியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அந்த பெண் கர்ப்பம் ஆனார்.

    மருத்துவ பரிசோதனையில், அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையறிந்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவரை அவருடைய பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டார். இதையடுத்து, அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

    ஆனால், அந்த குழந்தையை பார்க்க அந்த பெண்ணின் கணவர் செல்லவில்லை. அவரது பராமரிப்புக்கான செலவையும் ஏற்கவில்லை. இதனால், வேதனை அடைந்த அந்த பெண், தனக்கான பராமரிப்பு செலவை தன்னுடைய கணவரிடம் பெற்று தரக்கோரி தானே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, மனைவி எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவரது பராமரிப்புக்கான செலவை கணவரே ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி, மனுதாரருக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் அளிக்க வேண்டும் என்று அவரது கணவருக்கு உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து அந்த வாலிபர் தானே செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி பி.பி.ஜாதவ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கீழ்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்து தீர்ப்பு அளித்தார். தீர்ப்பு விவரம் வருமாறு:-

    பிரதிவாதி (இளம்பெண்) எவ்வாறு எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளானார் என்பதை இந்த தருணத்தில் ஆராய முடியாது. அதே சமயம், மனுதாரருடன் (கணவன்) திருமணம் முடிந்து இல்லற வாழ்வில் அடி எடுத்து வைத்த பின்னரே, அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சூழலில், ஒரு கணவனாக அந்த பெண்ணின் பராமரிப்பு செலவை ஏற்க வேண்டியது உங்கள் கடமை.

    இவ்வாறு நீதிபதி பி.பி.ஜாதவ் உத்தரவிட்டார்.

    Next Story
    ×