search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் உரி தாக்குதல்: பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா வழங்கிய ஆதாரம்
    X

    காஷ்மீர் உரி தாக்குதல்: பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா வழங்கிய ஆதாரம்

    உரி ராணுவ முகாம் தாக்குதலை வழிநடத்திய பாகிஸ்தான் சதிகாரர்களை அம்பலப்படுத்துவதற்கான ஆதாரத்தை, அந்த நாட்டின் தூதரை நேரில் அழைத்து, இந்தியா வழங்கியது.
    புதுடெல்லி:

    உரி ராணுவ முகாம் தாக்குதலை வழிநடத்திய பாகிஸ்தான் சதிகாரர்களை அம்பலப்படுத்துவதற்கான ஆதாரத்தை, அந்த நாட்டின் தூதரை நேரில் அழைத்து, இந்தியா வழங்கியது.

    காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள இந்திய ராணுவ முகாமில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் கடந்த 18-ந் தேதி அதிகாலை புகுந்து, ஓய்வில் இருந்த ராணுவ வீரர்கள் மீது கோழைத்தனமான தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இருப்பினும், இந்த தாக்குதல் நாடு முழுவதும் பாகிஸ்தான் மீது கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து பயங்கரவாதிகளை எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்துவதற்கு ஊக்குவித்து வரும் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவித்து, தனிமைப்படுத்த வேண்டும் என்ற குரல், நாடு முழுவதும் வலுத்துள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப், அந்த நாட்டின் ‘சமா’ தொலைக்காட்சிக்கு நேற்று முன்தினம் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர், “பாகிஸ்தானுக்கு அவப்பெயர் உண்டுபண்ணுவதற்காக, உரி ராணுவ முகாம் தாக்குதல் இந்தியா தானாக உருவாக்கிய தாக்குதல் என நான் உறுதியாக நம்புகிறேன்” என திரும்பத்திரும்ப கூறினார்.

    பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்திருப்பது பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “ஒவ்வொரு நாட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிரான சக்திகள் இருக்கின்றன. ஆனால் அவர்களின் குரல்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது அந்தந்த நாடுகளின் கொள்கைகளை சார்ந்திருக்கிறது. நமக்கு எதிராக 5 அல்லது 10 குரல்கள் எழுந்தால், அது பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதற்கு போதுமான ஆதாரமாக அமையாது” என பதில் அளித்தார்.

    இந்த நிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர் நேற்று நேரில் அழைத்தார். அவரிடம் உரி தாக்குதலை பின்னணியில் இருந்து இயக்கிய சதிகாரர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்வதற்கான ஆதார ஆவணங்களை வழங்கினார்.

    அப்போது பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்திடம், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர் கூறிய முக்கிய தகவல்கள்:-

    * உரி ராணுவ முகாம் தாக்குதலின்போது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஹபீஸ் அகமது. இவர், முசாபராபாத் தார்பாங் பகுதியை சேர்ந்த பெரோஸ் என்பவருடைய மகன் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    * உரி ராணுவ முகாமிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு வழிகாட்டிகளாக இருந்தவர்கள், பைசல் உசேன் அவான் (வயது 20), யாசின் குர்ஷீத் (19). இவர்களில், பைசல் உசேன் அவான், முசாபராபாத் போதா ஜஹாங்கீர் பகுதியை சேர்ந்த குல் அக்பர் மகன். யாசின் குர்ஷீத், முசாபராபாத் கலியானா கலான் பகுதியை சேர்ந்த முகமது குர்ஷித் மகன்.

    * இவர்கள் 2 பேரும் உரி பகுதியை சேர்ந்த மக்களால் கடந்த 21-ந் தேதி பிடிக்கப்பட்டனர்.

    * தேசிய புலனாய்வு முகமையினர் (என்.ஐ.ஏ.) நடத்திய விசாரணையில், பைசல் உசேன் அவான், உரி ராணுவ முகாம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை வழி நடத்தியது நாங்கள்தான் என ஒப்புக்கொண்டார்.

    * பாகிஸ்தான் சியால்கோட் பகுதியை சேர்ந்த அப்துல் கயூம் 23-ந் தேதி, மோலு செக்டாரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தினரிடம் 3 வார காலமாக பயிற்சி பெற்று வந்துள்ளதை ஒப்புக்கொண்டார்.

    * இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இந்த 3 பேரிடமும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சந்தித்து பேச அனுமதி தருகிறோம்.

    * இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எல்லை தாண்டி தாக்குதல்களை தொடர்வதை ஏற்க முடியாது. தனது மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்ற தனது வாக்குறுதியை பாகிஸ்தான் தீவிரமாக எடுத்துக்கொண்டு பின்பற்ற வேண்டும்.

    இந்த தகவல்களை பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்திடம் மத்திய வெளியுறவு துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்து, ஆதாரங்களை வழங்கினார்.

    இதை மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப், நிருபர்களை சந்தித்து தெரிவித்தார்.

    ஏற்கனவே, இந்தியாவில் நடந்த எல்லை தாண்டிய தாக்குதல்கள்குறித்து பாகிஸ்தான் விசாரணை நடத்த முன்வந்தால், உரி ராணுவமுகாம் மற்றும் பூஞ்ச் பகுதி தாக்குதல்களின்போது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் கைவிரல் ரேகை பதிவுகள், மரபணு மாதிரிகளை வழங்குவதற்கு தயார் என அந்த நாட்டிடம் இந்தியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    உரி ராணுவ முகாம் தாக்குதல், பாகிஸ்தானுக்கு அவப்பெயர் உண்டுபண்ணுவதற்காக இந்தியா தானாக உருவாக்கிய தாக்குதல் என்று பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்தியா அந்த தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் சதிகாரர்கள் என்பதற்கான ஆதாரத்தை நேற்று வழங்கி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
    Next Story
    ×