search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கொலை: மாணவர்கள் 2 பேர் கைது
    X

    டெல்லியில் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கொலை: மாணவர்கள் 2 பேர் கைது

    டெல்லியில் அரசு பள்ளி ஆசிரியரை குத்திக் கொலை செய்த பிளஸ்-2 மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுடெல்லி:

    டெல்லியில் அரசு பள்ளி ஆசிரியரை குத்திக் கொலை செய்த பிளஸ்-2 மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    டெல்லியின் மேற்கு பகுதியில் நங்கோலி என்ற இடத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்தி ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் முகேஷ் குமார்.

    நேற்று முன்தினம் இந்த பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வு நடந்தது. மாணவர்கள் தேர்வு எழுதி கொண்டிருந்த வகுப்பறையில் முகேஷ் குமார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். மாலை 5 மணியளவில் தேர்வு நேரம் முடிந்ததும் முகேஷ் குமார் மாணவர்களிடம் இருந்து விடைத்தாள்களை சேகரித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது வெளியில் இருந்து வந்த மாணவர் ஒருவர் வகுப்பறைக்குள் புகுந்து திடீரென முகேஷ் குமாரை தாக்கினார். அவரோடு வகுப்பறையில் இருந்த மற்றொரு மாணவரும் சேர்ந்து கொண்டு இருவரும் ஆசிரியரை கண்மூடித்தனமாக தாக்கினர்.

    பின்னர் மாணவர்களில் ஒருவர் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் முகேஷ் குமாரை சரமாரியாக குத்திவிட்டு, இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் முகேஷ் குமார் நிலைகுலைந்து கீழே சாய்ந்தார். பள்ளியில் இருந்த சக ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அன்று இரவே முகேஷ் குமார் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அந்த பள்ளியில் வரலாற்று ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் கூறியதாவது:-

    “பிளஸ்-2 வகுப்பை சேர்ந்த ஒரு சில மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்து கொண்டு வகுப்பை புறக்கணித்து வந்ததோடு மட்டும் இல்லாமல் ஒழுங்கீனமான செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். இதனால் அவர்கள் பல முறை தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் போயினர். இது குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தும் எந்த பயனும் இல்லாததால் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களின் வகுப்பு ஆசிரியர் தான் முகேஷ் குமார்.

    அவ்வாறு நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர் தான் பள்ளிக்குள் நுழைந்து முகேஷ் குமாரை குத்திக் கொலை செய்து உள்ளார். அவருக்கு பள்ளியில் இருந்த மற்றொரு மாணவர் துணையாக இருந்து உள்ளார்.”

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மாணவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள், ஆசிரியரை கொலை செய்த மாணவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும், உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்துக்கு அரசு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் உள்ள குறிப்பிட்ட சில பள்ளிகளில் தேர்வுகளை நிறுத்தி வைத்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளதோடு முகேஷ் குமாரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்து உள்ளார்.
    Next Story
    ×