search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரின் 95 சதவீத இளைஞர்கள் நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறார்கள்: நபீல் வானி
    X

    ஜம்மு காஷ்மீரின் 95 சதவீத இளைஞர்கள் நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறார்கள்: நபீல் வானி

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 95 சதவீத இளைஞர்கள் நாட்டுக்கு சேவை செய்ய விரும்புவதாக எல்லைப் பாதுகாப்பு படை தேர்வில் முதலிடம் பிடித்த காஷ்மீர் இளைஞர் நபீல் அகமது வானி தெரிவித்துள்ளார்.
    புனே:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 95 சதவீத இளைஞர்கள் நாட்டுக்கு சேவை செய்ய விரும்புவதாக எல்லைப் பாதுகாப்பு படை தேர்வில் முதலிடம் பிடித்த காஷ்மீர் இளைஞர் நபீல் அகமது வானி தெரிவித்துள்ளார்.

    எல்லைப் பாதுகாப்பு படையின் உதவி கமாண்டர் தேர்வில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த நபீல் அகமது வானி முதலிடம் பிடித்தார். அவருக்கு புனேயைச்சேர்ந்த அரசு சாரா அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற நபீல் அகமது வானி கூறியதாவது:-

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பாதுகாப்பு படைகளில் சேர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதன்மூலம் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையிலான இடைவெளிக்கு பாலமாக அமையும். பாதுகாப்பு பணி என்பது வெறும் வேலை மட்டும்தான் என நான் நினைக்கவில்லை. அது வாழ்க்கையின் ஒரு பாதை, தாய்நாட்டை நோக்கிய ஒரு ஈடுபாடு.

    சமூக ஊடகம் அல்லது தொலைக்காட்சிகளில் சித்தரிக்கப்படுவதுபோது ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் தவறான பாதையை விரும்பவில்லை. தவறான பாதையில் செல்லும் 5 சதவீத இளைஞர்களுடன், மீதமுள்ள 95 சதவீத இளைஞர்களை ஒப்பிடக்கூடாது. அந்த 95 சதவீதம் பேர் என்னைப் போன்று நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறார்கள்.

    நான் பணம் சம்பாதிப்பதற்காக எல்லைப் பாதுகாப்பு படையில் சேரவில்லை, ஆனால் தாய்நாட்டிற்கு சேவை செய்து திருப்தி அடைவதற்காகவே சேர்ந்தேன். ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இளைஞர்கள் ஒவ்வொரு தேர்விலும் முதலிடம் பிடிக்கும் திறமை உள்ளது. ஆகவே, எதிர்மறையான விஷயங்களுக்கும் எதிர்மறையான பெயர்களுக்கும் விளம்பரம் தேடிக்கொடுக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெல்லட் குண்டு தாக்குதல் குறித்து கேட்டபோது, ‘காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள நிலைமை மோசமாக இருப்பது எனக்கு தெரியும். வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. எனவே, வன்முறையிலோ கல்வீச்சிலோ ஈடுபடாமல் பேச்சுவார்த்தை மூலம் இதனை மாற்ற முடியும்” என்றார் வானி.

    26 வயதான வானி, தற்போது உதம்பூரில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×