search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உரி தாக்குதல்: பாகிஸ்தான் தூதரை அழைத்து ஆதாரங்களை வழங்கியது இந்தியா
    X

    உரி தாக்குதல்: பாகிஸ்தான் தூதரை அழைத்து ஆதாரங்களை வழங்கியது இந்தியா

    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா இன்று வழங்கியுள்ளது.
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள இந்திய ராணுவ முகாமில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் கடந்த 18-ந்தேதி அதிகாலை புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் தேசிய புலனாய்வு பிரிவின் காவலில் உள்ளனர்.

    இந்த தாக்குதல் நாடு முழுவதும் பாகிஸ்தான் மீது கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை அம்பலப்படுத்திய இந்தியா, உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

    உரி பயங்கரவாத தாக்குதலில் தங்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு எதுவும் இல்லை என்று பாகிஸ்தான் கூறிவரும் நிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இன்று நேரில் அழைத்தார்.

    அவரிடம் உரி தாக்குதலை பின்னணியில் இருந்து இயக்கிய சதிகாரர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்வதற்கான ஆதார ஆவணங்களை வழங்கினார்.

    இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல் தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட அவர், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவி செய்து கைது செய்யப்பட்ட இருவரைப் பற்றிய தகவல்களையும் ஆதாரத்துடன் வழங்கினார்.
    Next Story
    ×