search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதா அமிர்தானந்தமயி பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு 2 ஆயிரம் இலவச வீடுகள்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்
    X

    மாதா அமிர்தானந்தமயி பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு 2 ஆயிரம் இலவச வீடுகள்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்

    கொல்லத்தில் மாதா அமிர்தானந்தமயி பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு 2 ஆயிரம் இலவச வீடுகளை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் பெண் சாமியார் மாதா அமிர்தானந்தமயி. இவர் கொல்லம் அமிர்தபுரியில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

    ஒவ்வொரு ஆண்டு இவரது பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்படுவது வழக்கம். இன்று மாதா அமிர்தானந்தமயிக்கு 63-வது பிறந்தநாள் ஆகும்.

    மாதா அமிர்தானந்தமயின் பிறந்தநாள் விழா கடந்த சனிக்கிழமை முதல் அமிர்தபுரி ஆசிரமத்தில் நடந்து வருகிறது. இன்று நடந்த விழாவில் கேரள கவர்னர் சதாசிவம், மத்திய மந்திரிகள் நிதின்கட்காரி, ராஜீவ்பிரதாப்ரூடி, ஆர்.எஸ்.எஸ். அகிலஇந்திய தலைவர் மோகன்பகவத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் மாதா அமிர்தானந்தமயின் பிறந்தநாள் விழா தொடங்கியது. நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 2 ஆயிரம் ஏழை ஜோடிகளுக்கு அவர் இலவச திருமணத்தை நடத்திவைத்தார்.

    மேலும் மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாளையொட்டி கொல்லம் பகுதியில் 2 ஆயிரம் இலவச வீடுகள் ஏழைகளுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை டெல்லியில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்து பேசினார்.

    பிறந்தநாளையொட்டி ஆசிரமத்தில் ஏழைகளுக்கு அன்னதானமும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. நாளையும் விழா நடைபெறுகிறது. நாளை மாதா அமிர்தானந்தமயி கேரளாவை சேர்ந்த ஏழை மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை இலவசமாக வழங்குகிறார். நாளையும் அவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

    மாதா அமிர்தானந்தமயி பிறந்தநாளையொட்டி அமிர்தபுரி ஆசிரமத்தில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்து உள்ளனர்.
    Next Story
    ×