search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி சரியான நடவடிக்கை எடுக்காததால் உலக நாடுகளிடம் இருந்து இந்தியா தனிமை பட போகிறது: சிவசேனா மீண்டும் தாக்கு
    X

    மோடி சரியான நடவடிக்கை எடுக்காததால் உலக நாடுகளிடம் இருந்து இந்தியா தனிமை பட போகிறது: சிவசேனா மீண்டும் தாக்கு

    உரி தாக்குதல் பிரச்சினையில் மோடி சரியான நடவடிக்கை எடுக்காததால் உலக நாடுகளிடம் இருந்து இந்தியா தனிமை பட போகிறது என சிவசேனா மீண்டும் தாக்குதல் தெரிவித்துள்ளது
    மும்பை:

    உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து பிரதமர் மோடியை பற்றி சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்து இருந்தது.

    மோடியின் நடவடிக்கைகள் சரியில்லாததால் தான் இந்த தாக்குதல் நடந்ததாக சிவசேனா குற்றம் சாட்டி இருந்தது. இத்தனைக்கும் சிவசேனா கட்சி பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து பிரதமர் மோடியை அந்த கட்சி விமர்சித்து வருகிறது.

    இப்போது, உரி தாக்குதல் தொடர்பாக மீண்டும் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, உத்தரபிரதேசத்தில் பேசிய பிரதமர் மோடி நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எனது 56 அங்குலம் கொண்ட மார்பு நெஞ்சுறுதி கொண்டு தீர்த்து வைக்கும் என்று பேசி இருந்தார்.

    அதை சுட்டிக்காட்டி சிவசேனா தனது சாம்னா பத்திரிக்கையில் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    நாட்டுக்கு ஏற்படும் பிரச்சினையை தனது 56 அங்குலம் மார்பு எதிர்த்து நிற்கும் என்று மோடி கூறினார். ஆனால் இப்போது அவரது 56 அங்குலம் மார்பு எங்கே போனது என்று தெரியவில்லை. அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் தனது 56 அங்குல மார்பை திறந்து காட்டி கொக்கரித்து கொண்டிருக்கிறார்.

    உரி தாக்குதல் பிரச்சினையில் நரேந்திரமோடி பாகிஸ்தானுக்கு எதிராக சரியான நடவடிக்கைளை மேற்கொள்ளவில்லை. அதே நேரத்தில் நவாஸ்செரீப் இதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.

    இந்த பிரச்சனை தொடர்பாக வெளிநாட்டு தலைவர்கள் ஏதோ சற்று வாய்திறந்ததோடு சரி, வேறு எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையை பார்த்தால் மற்ற நாடுகளில் இருந்து இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

    சர்வதேச அளவில் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் எதுவுமே நமக்கு உரிய பலனை கொடுக்கவில்லை. எந்த நாடும் நமக்கு பக்கபலமாக இருக்க முன்வரவில்லை.

    பாகிஸ்தானுடன் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட ரஷியா இந்த பயிற்சியை நிறுத்தவில்லை. இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சீனா கண்டிக்கவில்லை. பாகிஸ்தானுக்கு இந்தோனேஷியா ராணுவ உதவிகளை செய்கிறது. நேபாளம் கூட பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்தி இருக்கிறது.

    நிலைமை இப்படி இருக்கும்போது உலக நாடுகளிடமிருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த போகிறோம் என்று நீங்கள் (பா. ஜனதா) கூறிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இந்தியாதான் தனிமைப்பட போகிறது போன்ற தோற்றம் தென்படுகிறது.

    இவ்வாறு அந்த பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ளது.
    Next Story
    ×