search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் விவசாயியை துப்பாக்கியால் சுட்டு ரூ.5 லட்சம் கொள்ளை - 3 பேர் கைது
    X

    ஆந்திராவில் விவசாயியை துப்பாக்கியால் சுட்டு ரூ.5 லட்சம் கொள்ளை - 3 பேர் கைது

    கொலை முயற்சி தோல்வியில் முடிந்ததால் விவசாயியை துப்பாக்கியால் சுட்டு ரூ.5 லட்சம் கொள்ளையடித்த ஜார்கண்ட் வாலிபர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சித்தூர்:

    ஆந்திரா மாநிலம் பெனுமூர் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் குமார்நாயுடு, விஸ்வநாத நாயுடு. இருவரும் விவசாயிகள். இருவருக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. குமார்நாயுடு, விஸ்வநாத நாயுடுவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முடிவு செய்தார்.

    அதற்காக ஐதராபாத்தில் உள்ள தனது நண்பர் சீனிவாச நாயுடுவுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். ஜார்கண்ட் மாநில கூலிப் படையைச் சேர்ந்த சீனிவாஸ் (வயது 28), சிவக்குமார் (29) என்ற இரு வாலிபர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக பேரம் பேசி, அவர்களை பெனுமூருக்கு அழைத்து வந்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று பெனுமூர் வந்த கூலிப் படையினர் இருவரும், விஸ்வநாத நாயுடுவின் வருகையை எதிர்நோக்கி சாலையில் வெகுநேரம் காத்திருந்தனர். விஸ்வநாத நாயுடு வழக்கம்போல் செல்லும் பாதையில் போகாமல், வேறொரு பாதையில் சென்றுவிட்டார். இதனால், கூலிப் படையினரின் கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது.

    கொலை முயற்சி தோல்வியில் முடிந்ததால், வேறொரு நாளன்று விஸ்வநாத நாயுடுவை கொலை செய்யலாம் என குமார்நாயுடு, கூலிப்படையினரிடம் கூறிவிட்டார். அத்துடன் கொலை திட்டத்தையும் அவர்கள் மாற்றியமைத்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டனர். வழியில், குடிபோதையில் இருந்த கூலிப்படையினர் 2 பேரும், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயியான தினேஷ் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து, துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்றனர்.

    இரு வாலிபர்களை பார்த்த தினேஷ் கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த கூலிப் படையினர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தினேசை சுட்டனர். துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர், சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து விழுந்தார். அதைத்தொடர்ந்து கூலிப்படையினர் இருவரும், தினேஷ் வீட்டில் வைத்திருந்த பீரோவை உடைத்து ரூ.5 லட்சம் ரொக்கப்பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

    துப்பாக்கி வெடித்த சத்தத்தை கேட்டதும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தினேஷ் வீட்டுக்கு ஓடி வந்தனர். வீட்டில் தினேஷ் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், தினேசை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, உடலில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் குண்டை அகற்றினர். இதனால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதுகுறித்து தினேஷ் குடும்பத்தினர் பெனுமூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே ஜார்கண்ட் மாநில கூலிப்படையைச் சேர்ந்த சீனிவாஸ், சிவக்குமார், பெனுமூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி குமார்நாயுடு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கப்பணம், தங்க நகைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×