search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் உரி தாக்குதல்: பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் - மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை
    X

    காஷ்மீர் உரி தாக்குதல்: பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் - மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

    உரி ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதல் பற்றி விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    உரி ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதல் பற்றி விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் உரி தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டு வரும் பதில் நடவடிக்கைகளில் திருப்தியில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எனவே இது தொடர்பாக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    உரியில் தாக்குதல் நடந்து இன்றுடன் (நேற்று) 9 நாட்கள் ஆகி விட்டது. ஆனால் இந்த தாக்குதலுக்கு கோழிக்கோட்டில் நடந்த கூட்டம் வழியாக அரசு வெளியிட்ட செய்தி, ஒரு கவலைக்குரிய பதில் நடவடிக்கையாக உள்ளது.

    இந்தியா பலமற்று இருப்பதாக தோன்றுவதுடன், பாகிஸ்தானுக்கு வலுவான ஒரு பதிலடியை வழங்க தவறிவிட்டது. தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை, நிபுணத்துவ தெளிவின்மையை காட்டுகிறது. இந்தியாவை நகைப்புக்கு உள்ளாக்கும் இத்தகைய குழப்ப நிலையை நாங்கள் விரும்பவில்லை.

    நாட்டின் பாதுகாப்பு நிலைமை கடுமையான அச்சுறுத்தலில் உள்ளது. முரட்டு பாகிஸ்தானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகின்றனர். அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக உயர் பதவிகளை வகிப்பவர்களே நாட்டின் பாதுகாப்புக்கும் பொறுப்பானவர்கள் ஆவர்.

    நிபுணத்துவ கட்டுப்பாட்டைதான் காங்கிரஸ் கட்சி நம்புகிறது. குறிக்கோள் இல்லாத அரசியல் நிபுணத்துவம் கட்டுப்பாட்டு நிபுணத்துவத்துக்கு மாற்றாக இருக்காது.

    உரி தாக்குதல் மற்றும் நமது பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்கவும், பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என அறிவிக்கவும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பாகிஸ்தான் மீது கடுமையான பொருளாதார தடையும் விதிக்க வேண்டும்.

    டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் தரத்தை கணிசமான அளவுக்கு குறைத்து, அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டு உள்ள மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்தையும் ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அபிஷேக் மனு சிங்வி கூறினார்.
    Next Story
    ×