search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல்
    X

    காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல்

    6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடக்கோரி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் உத்தரவில் திருத்தம் கோரி கர்நாடக அரசு சார்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடக்கோரி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் உத்தரவில் திருத்தம் கோரி கர்நாடக அரசு சார்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் போதிய அளவு நீர்மட்டம் இல்லாததால் இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா பகுதியில் சம்பா பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து, சுப்ரீம்கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்றை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், தமிழகத்தின் சம்பா பயிர் சாகுபடிக் காக 50 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறி இருந்தது.

    இந்த மனு கடந்த 5-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கோரி, தமிழக அரசு காவிரி மேற்பார்வை குழுவை நாடவேண்டும். தமிழகம் அணுகிய உடன் அடுத்த 3 நாட்களுக்குள் கர்நாடக அரசு தங்கள் பதிலை மேற்பார்வை குழுவின் முன்பாக தாக்கல் செய்யவேண்டும். அதன்பிறகு 4 நாட்களுக்குள் மேற்பார்வை குழு, தமிழகத்துக்கு கர்நாடகம் எவ்வளவு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டும்’ என்று கூறியது.

    மேலும், உடனடி நிவாரணமாக கர்நாடகம் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

    இந்த உத்தரவை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. தமிழகத்தை சேர்ந்த பஸ்கள், லாரிகள் பெங்களூருவில் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தமிழர் கள் பல இடங்களில் தாக்கப்பட்டனர். தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

    இதையடுத்து இந்த உத்தரவின் மீது திருத்தம் கோரும் மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அந்த மனுவை கடந்த 12-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ந்தேதி வரை தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது

    இதற்கிடையில் காவிரி மேற்பார்வை குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் 21-ந் தேதி முதல் 30-ந் தேதிவரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்துக்கு 10 நாட்கள் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று காவிரி மேற்பார்வை குழு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு மீதான விசாரணையின் போது  சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் வரையறுத்துள்ளபடி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அடுத்த 4 வாரங்களுக்குள் அமைக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும்  குழுவின் உத்தரவுக்கு எதிராக தங்களுடைய ஆட்சேபங்களை கர்நாடக அரசு மற்றும் தமிழக அரசு 3 நாட்களுக்குள் கோர்ட்டுக்கு தாக்கல் செய்யலாம்.

    இந்த வழக்கின் மீதான விசாரணை செப்டம்பர் 27-ந் தேதியன்று மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை இடைக்கால ஏற்பாடாக கர்நாடக அரசு காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு ஒரு நாளைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் 27-ந்தேதி வரை திறந்து விடவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் கர்நாடக அரசு சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக ஒரு ஆட்சேபனை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    தமிழகத்துக்கு தங்களால் தண்ணீர் கொடுக்க முடியாது தற்போது குடிநீருக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இப்போது உள்ள நீர் 5 மாவட்டங்களுக்கு கூட போதுமானதாக இல்லை.

    ஆகையால் தற்போது கர்நாடக அணைகளில் 26 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் உள்ள நீர் போதுமானதாக உள்ளது. எனவே எங்களால் தண்ணீர் திறக்க இயலாது என்று கர்நாடக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கர்நாடக அரசின் சார்பில் இன்று மேலும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யபட்டது அதில் 6 ஆயிரம் கனடி தண்ணீர் திறந்து விடக்கோரி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் உத்தரவில் திருத்தம் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தங்களிடம் போதிய தண்ணீர் கையிருப்பில் இல்லாததால் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீர் வருகிற டிசம்பர் மாதம் தரப்படும் எனவும் இன்றைய புதிய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×