search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவதாஸ் ஷெட்டி
    X
    தேவதாஸ் ஷெட்டி

    பெண் பயணியுடன் தகராறு: ஓடும் பஸ்சில் இருந்து ஆற்றில் குதித்த கண்டக்டர்

    மங்களூரில் பேருந்தில் சில்லரை கொடுப்பது தொடர்பாக பெண் பயணியுடன் ஏற்பட்ட தகராறில் ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டர் ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    மங்களூர்:

    கர்நாடக மாநில அரசு பஸ் ஒன்று மங்களூரில் இருந்து சுப்பிரமணியா கோவிலுக்கு சென்றது. இதில் கண்டக்டராக தேவதாஸ் ஷெட்டி பணியாற்றி வந்தார்.

    இந்த பஸ்சில் அம்பேத்கார் சர்க்கிள் என்ற இடத்தில் பெண் பயணி ஒருவர் ஏறினார். அவர் கடாபா செல்வதற்கு டிக்கெட் எடுத்தார். மீதி பணத்தை கொடுப்பதற்கு கண்டக்டரிடம் சில்லரை இல்லை. எனவே பின்னர் தருகிறேன் என்று கண்டக்டர் கூறினார்.

    இடையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது கண்டக்டரிடம் அந்த பெண் மீதி சில்லரையை கேட்டார். இதையடுத்து கண்டக்டர் 100 ரூபாயில் பஸ் கட்டணம் போக மீதி பணத்தை கொடுத்தார்.

    ஆனால் அந்த பெண் நான் 500 ரூபாய் கொடுத்தேன். எனவே மீதி பணத்தை கொடுங்கள் என்று கேட்டார். அதற்கு கண்டக்டர் நீங்கள் 100 ரூபாய்தான் கொடுத்தீர்கள் என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து கண்டக்டர் பஸ்சை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி செல்ல உத்தரவிட்டதார். அதன்படி போலீஸ் நிலையத்திற்கு பஸ் சென்றது. அங்கிருந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் கண்டக்டரிடம் நீங்கள் 500 ரூபாயை கணக்கிட்டு மீதி பணத்தை கொடுங்கள் என்று கூறினார்கள். அதன்படி கண்டக்டர் பணத்தை கொடுத்தார்.

    இந்த நிலையில் பஸ் கடாபா வந்ததும் அந்த பெண் இறங்கிவிட்டார். தொடர்ந்து பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ் குமாரதாரா ஆற்று பாலத்தில் சென்றது. அப்போது ஆற்றில் அதிக அளவில் வெள்ளம் சென்று கொண்டிருந்தது.

    திடீரென கண்டக்டர் தேவதாஸ் ஷெட்டி ஓடும் பஸ்சில் இருந்து ஆற்றில் குதித்தார். உடனே பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது ஆற்றில் சிலர் குளித்து கொண்டிருந்தனர். அவர்கள் கண்டக்டரை காப்பாற்றுவதற்கு முயற்சித்தனர். ஆனால் அதை கண்டக்டர் தடுத்தார். இறுதியில் அவரை வெள்ளம் இழுத்து சென்றுவிட்டது.

    அவர் கதி என்ன என்று தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் காணவில்லை என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கண்டக்டர் தனது டிரிப் சீட்டில் ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தார். அதில் இவ்வளவு அவமானப்படுவதை விட சாவதே மேல், அனைத்து உடன் பணிபுரிபவர்களுக்கும் குட்பை என்று எழுதப்பட்டிருந்தது.

    இந்த கண்டக்டர் சிறந்த பணியாளர் என்று விருது வாங்கியவர் ஆவார். அவருக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
    Next Story
    ×