search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    83-வது பிறந்தநாள்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    X

    83-வது பிறந்தநாள்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    பத்தாண்டுகள் இந்தியாவின் பிரதமராக முன்னர் பதவிவகித்த டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பத்தாண்டுகள் இந்தியாவின் பிரதமராக முன்னர் பதவிவகித்த டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    பாகிஸ்தான் நாட்டில் பிறந்தவர்களில் பலர் 1947-ம் ஆண்டு ஒன்றுபட்ட இந்தியா விடுதலை பெற்றபின்னர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர். அவர்களில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் குடும்பமும் ஒன்றாகும்.

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகருக்கு பெற்றோருடன் குடிபெயர்ந்த மன்மோகன் சிங், அங்குள்ள இந்து கல்லூரியிலும், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும் பயின்று பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர், இங்கிலாந்தில் உள்ள பிரபல கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்று பொருளாதாரத்துறையில் முனைவராக உயர்ந்த அவர் 1966-ம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார்.

    1966-69 ஆண்டுவாக்கில் ஐக்கியநாடுகள் சபையின் வர்த்தக கூட்டமைப்பில் இந்திய அரசின் பிரதிநிதியாக இடம்பெற்றிருந்த மன்மோகன் சிங் 1969- 1971-ம் ஆண்டுவரை டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட டெல்லி பொருளாதாரப் பள்ளியில் சர்வதேச வர்த்தகம் தொடர்பான துறையில் பேராசிரியராக பணியாற்றினார்.

    1972-ம் ஆண்டு இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் முத்த பொருளாதார ஆலோசகராக இருந்த அவர், 1976-ம் ஆண்டு நிதி அமைச்சகத்தின் செயலாளராக உயர்ந்தார். தற்போதைய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி நாட்டின் நிதிமந்திரியாக பதவிவகித்தபோது 1982-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குனராக நியமிக்கப்பட்ட மன்மோகன் சிங், 1985 வரை இந்த பதவியை வகித்தார்.

    பின்னர், நாட்டின் திட்டக்குழு துணைத்தலைவராக 1985 முதல் 1987-ம் ஆண்டுவரை பணியாற்றி, 1987 முதல் 1990-ம் ஆண்டுவரை சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் உள்ள பொருளாதாரம் சார்ந்த சிந்தனை சுரங்கத்தின் தெற்கு மண்டல பொதுச்செயலாளராக பதவி வகித்தார். 1990-ம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் அந்நாள் பிரதமர் வி.பி.சிங்கின் பொருளாதார ஆலோசகராக அமர்த்தப்பட்டார்.

    1991-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவராகவும் அதே ஆண்டில் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய மந்திரிசபையில் நிதிமந்திரியாகவும் நியமிக்கப்பட்டார். அசாம் மாநிலத்தில் இருந்து தேர்நெடுக்கப்பட்ட ராஜ்யசபை உறுப்பினராக இந்த பதவியை தொடர்ந்த மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து பத்தாண்டுகள் நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.

    இந்த காலகட்டத்தில் உலகநாடுகள் அனைத்தும் பொருளாதார மந்தநிலை மற்றும் இறங்குமுகத்தில் சிக்கித்தவித்தபோது, தனது அனுபவம் மற்றும் திறமையால் இந்தியாவிம் பொருளாதாரத்தை மீட்டதுடன், உலகநாடுகளின் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வுகாணவும் இவர் உதவிகரமாக இருந்துள்ளார்.

    2014-பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின்னர் தற்போது, பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராக மட்டும் பதவி வகித்துவரும் டாக்டர் மன்மோகன் சிங் விரைவில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக பணியாற்ற தீர்மானித்துள்ளார்.

    இந்நிலையில், இன்று 83-வது பிறந்தநாள் காணும் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், தனது டுவிட்டர் பக்கத்திலும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள மோடி, இன்று பிறந்தநாள் காணும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் நிறைந்த ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ்ந்திருக்க இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×