search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திரா, தெலுங்கானாவில் 4-வது நாளாக மழை: ஐதராபாத்தில் மீட்பு பணிக்கு துணை ராணுவம் விரைந்தது
    X

    ஆந்திரா, தெலுங்கானாவில் 4-வது நாளாக மழை: ஐதராபாத்தில் மீட்பு பணிக்கு துணை ராணுவம் விரைந்தது

    ஆந்திரா, தெலுங்கானாவில் 4-வது நாளாக நேற்றும் மழை பெய்தது. பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகளுக்கு துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
    ஐதராபாத்:

    வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தொடர் மழை பெய்து வருகிறது. ஆந்திராவில் நேற்று 4-வது நாளாக மழை நீடித்தது.

    இதனால் பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, ஸ்ரீகாகுளம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் மழை வெள்ளம் ரோடுகளிலும், தெருக்களிலும் கரை புரண்டு ஓடியது. பல இடங்களில் தண்ணீர் முட்டளவுக்கு தேங்கி நின்றது.

    இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கிருஷ்ணா, பிரகாசம், குண்டூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 40 ஆயிரம் எக்டேர் பரப்பிலான பயிர்கள் நாசம் அடைந்தன.

    வெள்ளத்தில் 10 பேர் அடித்துச்செல்லப்பட்டனர். அதில் 7 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் 3 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. இடி தாக்கி ஒருவர் பலியானார்.

    தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் 3 பெண்கள் இறந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர். மேலும் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனால் ஆந்திரா, தெலுங்கானாவில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆனது.

    தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில் மழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. குடியிருப்பு பகுதிகளையும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்கள் மழை வெள்ளத்தில் சிக்கின

    மழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பால், காய்கறி வரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக விலையும் உயர்ந்தது.

    ரெயில் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மழை காரணமாக செகந்திரா பாத்-குண்டூர் இடையே ரெயில் தண்டவாளம் 15 கி.மீ. தொலைவுக்கு அடித்து செல்லப்பட்டது. இதனால் நேற்று 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டது.

    கல்வி நிலையங்களுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல மென் பொருள் நிறுவன ஊழியர்களுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்குமாறு மென்பொருள் நிறுவனங்களை மாநில தகவல் தொழில் நுட்பத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகளுக்கு துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்களை மீட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆந்திரா, தெலுங்கானாவில அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.
    Next Story
    ×