search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பானையை வெட்டி குழந்தையை வெளியே எடுத்த காட்சி.
    X
    பானையை வெட்டி குழந்தையை வெளியே எடுத்த காட்சி.

    கேரளாவில் குளிக்கும்போது பானைக்குள் மாட்டிக்கொண்ட 2 வயது குழந்தை

    கேரளாவில் குளிக்கும்போது பானைக்குள் மாட்டிக்கொண்ட 2 வயது குழந்தையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை அடுத்த ஆலுவாவைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி திவ்யா.

    இவர்களுக்கு நிரஞ்சனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. ஒவ்வொரு நாளும் காலையில் நிரஞ்சனாவை அவரது தாயார் வீட்டின் பின்பகுதியில் வைத்து குளிப்பாட்டுவார்.

    எவர்சில்வர் பானையில் தண்ணீரை கொண்டு வந்து அதை குழந்தையின் தலையில் ஊற்றி குளிப்பாட்டுவது வழக்கம்.

    நேற்றும் இதுபோல குழந்தையை குளிப்பாட்ட திவ்யா பானையில் தண்ணீர் எடுத்து வந்தார். அதனை வீட்டின் பின்பகுதியில் வைத்து விட்டு குழந்தையை குளிப்பாட்ட அழைத்துச் சென்றார்.

    பானையின் அருகே குழந்தையை அமர்த்தி விட்டு சமையல் அறைக்கு சென்றார். அவர், திரும்பி வருவதற்குள் குறும்புக்கார குழந்தை பானைக்குள் சென்று அமர்ந்து கொண்டது.

    பானைக்குள் குழந்தை அமர்ந்திருப்பதை முதலில் ரசித்த தாயார், பின்னர் குழந்தையை வெளியே எடுக்க முயன்றார். ஆனால் குழந்தையின் இடுப்பு பகுதி பானையின் வளைவில் சிக்கிக் கொண்டது.

    இதனால் குழந்தையை பானையில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லை. குழந்தையை இழுத்து பார்த்ததில் அதற்கு உடல் வலி ஏற்பட்டு குழந்தை அலறி துடித்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    குழந்தையின் நிலை கண்டு பதறிப்போன அவர்கள் ஆலப்புழா தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்தனர்.

    பானையை ‘கட்டர்’ மூலம் ஒரு புறமாக வெட்டி அதற்குள் சிக்கிய குழந்தையை பத்திரமாக மீட்டனர். வெளியே வந்த குழந்தை அழுகையை நிறுத்தி பெற்றோரை பார்த்து சிரித்தது. ஒருசில மணி நேரத்தில் தங்களை பதறவைத்த குழந்தை சிரித்ததும் பெற்றோரும் தங்களுக்கு ஏற்பட்ட இன்னலை மறந்து அவர்களும் மகிழ்ந்தனர்.
    Next Story
    ×