search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அமைச்சரவையில் எதிர்ப்பு
    X

    தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அமைச்சரவையில் எதிர்ப்பு

    முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
    பெங்களூர்:

    தமிழகத்துக்கு காவிரியில் 10 நாட்களுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட கடந்த 5-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    பின்னர் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனுதாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 20-ந் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து கர்நாடகாவில் கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றன.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இன்று முதல் வருகிற 27-ம் தேதிவரை தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடிவீதம் 7 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.

    இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது குறித்து ஆலோசனை நடத்த இன்று காலை அமைச்சரவை கூட்டமும், மாலையில் அனைத்து கட்சி கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார்.

    அதன்படி இன்று காலை 11 மணிக்கு முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் கூடியது. இதில் கர்நாடக அமைச்சர்களுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார். தமிழகத்துக்கு தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக சட்ட ஆலோசகர்களிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு கர்நாடக அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு முதல்-மந்திரி சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

    இதில் கர்நாடக அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் கர்நாடக எம்.பிக்களும் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதா? வேண்டாமா? என்பது பற்றி முடிவு எடுக்கப்படுகிறது. இந்த அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க பா.ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.
    Next Story
    ×