search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புனிதர் பட்டம் வழங்கப்படுவதையொட்டி ரூ.5 நாணயத்துடன் அன்னை தெரசா சிறப்பு தபால் உறை வெளியீடு
    X

    புனிதர் பட்டம் வழங்கப்படுவதையொட்டி ரூ.5 நாணயத்துடன் அன்னை தெரசா சிறப்பு தபால் உறை வெளியீடு

    புனிதர் பட்டம் வழங்கப்படுவதையொட்டி ரூ.5 நாணயத்துடன் அன்னை தெரசா சிறப்பு தபால் உறையை இந்திய தபால் இலாகாவான ‘இந்தியா போஸ்ட்’ சிறப்பு தபால் உறையை வருகிற 2-ந்தேதி வெளியிடுகிறது.
    கொல்கத்தா:

    மறைந்த பிரபல சமூக சேவகியும் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரியுமான அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகன் நகரில் வருகிற 4-ந்தேதி நடக்கிறது.

    இதையொட்டி, இந்திய தபால் இலாகாவான ‘இந்தியா போஸ்ட்’ ஆயிரம் எண்ணிக்கையிலான சிறப்பு தபால் உறை ஒன்றை வருகிற 2-ந்தேதி வெளியிடுகிறது. முற்றிலும் தூய்மையான பட்டுத் துணியால் உருவாக்கப்பட்ட இந்த தபால் உறையுடன் அன்னை தெரசாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி 2010-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட 5 ரூபாய் நாணயமும் இணைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற தபால் உறை இந்தியாவில் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இதேபோல் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் நாளில், அன்னை தெரசா பிறந்த நாடான மாசிடோனியா குடியரசு தங்கம் முலாம் பூசப்பட்ட வெள்ளி நாணயங்களை வெளியிட்டு சிறப்பிக்கிறது.

    தவிர, கொல்கத்தாவில் அன்னை தெரசா தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய ‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ தொண்டு நிறுவனத்தில் 5.5 அடி உயரம் கொண்ட அவருடைய வெண்கல சிலை ஒன்றும் மாசிடோனியா குடியரசின் கொல்கத்தா தூதரகம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) நிறுவப்படுகிறது.
    Next Story
    ×