search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • எஸ்பிஐ வழங்கிய தகவல்களில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயரைத் தவிர, பத்திரங்களின் வரிசை எண்கள் ஏன் இல்லை
    • இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை

    தேர்தல் பத்திரத்தைச் சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது

    அப்போது, "எஸ்பிஐ வழங்கிய தகவல்களில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயரைத் தவிர, பத்திரங்களின் வரிசை எண்கள் ஏன் இல்லை. இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவர்கள் பெயர், பத்திர எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 21 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.

    குறிப்பாக ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள அடையாள எண்ணை வெளியிட வேண்டும். தேர்தல் ஆணையம் அதனை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். வெளியிட்ட பின் 'எந்த தகவலும் விடுபடவில்லை' என்பதை பிரமாணப் பத்திரமாக எஸ்பிஐ வங்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற கொண்டிருந்த போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆதிஷ் அகர்வாலா, குடியரசுத் தலைவருக்கு தாம் கடிதம் எழுதியிருப்பதைக் குறிப்பிட்டார்.

    அதற்குக் கடுமையாக பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், "நீங்கள் ஒரு மூத்த வழக்கறிஞர் மற்றும் உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர். என்னுடைய சுய அதிகாரத்திற்கு எதிராக நீங்கள் தேவை இல்லாமல் இப்போது கடிதம் எழுதியுள்ளீர்கள். இவை அனைத்தும் விளம்பரம் தொடர்பான விஷயங்கள். நாங்கள் அதில் தலையிட விரும்பவில்லை. என்னை எதுவும் காட்டமாகச் சொல்ல வைக்காதீர்கள்" என எச்சரித்தார்.

    சில நாட்களுக்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கியின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வலியுறுத்துமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதியிருந்தார்.

    அக்கடிதத்தில், "இந்திய நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு முழுமையான நீதியை உறுதி செய்ய தேர்தல் பத்திரங்கள் வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும்.

    அரசியலமைப்பு சட்டத்திற்கு முட்டுக்கட்டையை உருவாக்கும் வகையிலும், நாடாளுமன்றத்தின் மகத்துவத்தை குலைக்கும் வகையிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கக் கூடாது.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கத்தை சந்தேகிப்பது மிக மோசமானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.
    • இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த ஆண்டு இறுதியில் அமைத்தது.

    இதில், இந்திய உசூ சம்மேளன தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா கமிட்டியின் தலைவராகவும், முன்னாள் ஆக்கி வீரர் எம்.எம். சோமயா, முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை மஞ்ஜூஷா கன்வார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இந்த கமிட்டியில் இருந்தனர்.

    வீரர்கள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான பதிவை சமர்ப்பிப்பது, போட்டிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு, வங்கி கணக்கு விவரங்களை கையாள்வது, இதன் இணையதளத்தை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை எல்லாம் இடைக்கால கமிட்டி மேற்கொண்டு வந்தன. 

    இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்று கூட்டமைப்பின் தற்காலிகக் குழுவை கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

    தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கம் நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட பிறகு, மற்றொரு குழு கொண்டு நிர்வகிக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.

    அடுத்த மாதம் கிர்கிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.

    அந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் அதிபராக நீடிப்பார்.
    • பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ரஷியாவில் அதிபருக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. நேற்றுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்.

    அவர் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் அதிபராக நீடிப்பார்.

    இந்நிலையில், ரஷிய அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ள விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    ரஷிய கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புதின்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்பான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட எதிர்நோக்குகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் வென்ற விருதுகள் அனைத்தையும் ஒப்படைப்பதாக தெரிவித்தார்
    • இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் தனது பதவியில் இருந்து விலகினார்

    இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றம் சாட்டிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதன் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் தனது பதவியில் இருந்து விலகினார்.

    இதனையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்கள் போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது என்று மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்தினர். எனினும், தேர்தலில் களம் கண்ட பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதை அறிந்து அதிர்ச்சி தெரிவித்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை ஒப்படைப்பதாகவும், மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாகவும் அறிவித்தனர்

    அந்த வரிசையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் வென்ற விருதுகள் அனைத்தையும் ஒப்படைப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

    அந்த கடிதத்தில், "ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு கலைகிறது. ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ விரும்புவர். ஆனால் கண்ணியத்துடன் வாழும் வாழ்க்கையில் விருதுகள் சுமையாக கூடாது என்பதால், நான் வாங்கிய விருதுகளை திரும்ப கொடுக்கிறேன்," என்று எழுதியிருந்தார்.

    இதனையடுத்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தனது கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை திருப்பி அளித்தார். தனது விருதுகளை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்க முனைந்த அவருக்கு, தில்லி காவல்துறையினர் அனுமதி மறுத்து வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் அந்த விருதுகளை பிரதமர் அலுவலகம் செல்லும் சாலையின் நடுவில் வைத்துவிட்டுத் திரும்பினார். பின்னர் காவல்துறையினர் அதை கைப்பற்றினர்.

    மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வீரேந்தர் சிங் யாதவ் ஆகியோரும் தங்களது விருதுகளை திருப்பி அளித்துள்ளனர்.

    இந்நிலையில், இதை விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வினேஷ் போகத் படத்தை மோடி பார்க்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.

    அந்த பதிவில், என் உயிரை பணயம் வைத்து பாலியல் பலாத்காரம் செய்பவர்களை காப்பாற்றுவேன் என்று நரேந்திர மோடி கூறுகிறார் என்று பதிவிட்டுள்ளது.

    • பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது.
    • பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கொடியும், ஸ்ரீ சிமென்ட் நிறுவனம் ₹2 கொடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதியாக ரூ.6,986 கோடி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2019- 20ம் ஆண்டில் மட்டும் பாஜகவிற்கு ரூ.2,555 கோடி தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கொடியும், ஸ்ரீ சிமென்ட் நிறுவனம் ₹2 கொடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை குறித்து தேர்தல் ஆணையத்திடம் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டில் எங்கள் அலுவலகத்துக்கு திடீரென வந்த சிலர் சீலிடப்பட்ட கவரை வைத்துவிட்டு சென்றனர். அதனை திறந்துபார்த்தபோது அதில் 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பத்திரங்கள் இருந்தன. அதனால் யார் எங்களுக்கு நன்கொடை கொடுத்தார்கள் என்ற தகவல் தெரியவில்லை என்று ஜனதா தள கட்சி தெரிவித்துள்ளது.

    அதே போல் சமாஜ்வாதி கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 10.84 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஆனால் அதில், 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பாத்திரங்கள் எங்களுக்கு தபால் மூலமாக வந்தது. ஆதலால் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்கள் தெரியவில்லை என சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

    • 15 லட்சம் ஷேர்களை நாராயண மூர்த்தி தற்போது அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்
    • இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது

    இன்போசிஸ் (infosys) ஐ.டி.நிறுவனம் 1981- ல் தொடங்கப்பட்டது. இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதன் ' நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி.

    இந்தியாவின் முக்கிய கோடீஸ்வரர்களில் இவர் முக்கியமானவர். இவரது மகன் ரோஹன் மூர்த்தி - அபர்ணா தம்பதிகளுக்கு கடந்த நவம்வர் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஏககிரா ரோஹன் என பெயர் சூட்டப்பட்டது.

    இந்த குழந்த மூலம் நாராயண மூர்த்தி தாத்தா ஆனார். இந்நிலையில் தனது 4 மாத பேரன் ஏககிரா ரோஹனுக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் 15 லட்சம் ஷேர்களை நாராயண மூர்த்தி தற்போது அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.

    இந்த ஷேர்களின் மொத்த மதிப்பு ரூ.240 கோடி. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் 0.04 சதவீத பங்குகளுக்கு ஏககிரா ரோஹன் உரிமையாளர் ஆகியுள்ளார். மேலும், இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய மோடி, ஜூன் மாதம் பொறுப்பேற்க போகும் புதிய அரசாங்கத்தின் முதல் 100 நாட்கள் மற்றும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தை உருவாக்குமாறு அமைச்சர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். புதிய அரசு அமைந்தவுடன், அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவது குறித்து, சம்பந்தப்பட்ட செயலர்களுடன் அமைச்சர்கள் கலந்துரையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மேலும், தேர்தல் நேரத்தில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாய் ஈடுபட்டாலும், அரசுப் பணிகளை வழக்கம் போல் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

    • டிராக்டரில் அதிக பாரம் ஏற்றப்பட்டதும் விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
    • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் இன்று காலை டிராக்டர் மீது ஜீப் நேருக்கு நேர் மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

    தேசிய நெடுஞ்சாலை 31-ல் பஸ்ராஹா பகுதியில் உள்ள பெட்ரோல் பம்ப் அருகே இன்று அதிகாலை 5.15 மணியளவில் விபத்து நடந்துள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஏழு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மூவரும் சிறந்த சிகிச்சைக்காக பாகல்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஜீப்பில் பயணித்தவர்கள் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    மேலும், டிராக்டரில் அதிக பாரம் ஏற்றப்பட்டதும் விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

    இறந்தவர்கள் கவுதம் குமார் (10), பிரகாஷ் சிங் (60), மோனு குமார் (11), அமன் குமார் (19), பூந்தி குமார் (22), அன்ஷு குமார் (22), வில்லோ குமார் (5) மற்றும் பல்து தாக்கூர் (5) என்றும்,

    காயமடைந்தவர்கள் சச்சித் தாக்கூர், தர்மேந்திர குமார் மற்றும் குந்தன் குமார் என்றும் தெரியவந்துள்ளது.

    விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன
    • பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் இணைக்கப்பட்ட குறுந்தகவல், வாட்ஸ் அப் வழியாக பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது

    இந்தியாவில் உள்ள பலருக்கும் வாட்ஸ்-அப்-இல் மோடியின் கடிதம் என்ற குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தேர்தல் விதி மீறல் என்று காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் இணைக்கப்பட்ட குறுந்தகவல், வாட்ஸ் அப் வழியாக பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது

    'விக்சித் பாரத் சம்பார்க்' என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள அந்த வாட்ஸ் அப் செய்தியில், அரசாங்க திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கேட்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, ஆயுஷ்மான் பாரத் போன்ற பல திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை கேட்பதாக தெரிவித்துள்ளது

    இந்த வாட்ஸ்-அப் செய்திக்கு கேரள மாநில காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எக்ஸ் பக்கத்தில், "வாட்ஸ்-அப் செய்தியில் கருத்து கேட்பது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்ளே இருப்பதோ தேர்தல் பரப்புரை. வாட்ஸ்-அப் கொள்கைப்படி, அரசியல் பரப்புரைகளை தடுப்பதாக கூறுகிறது. ஆனால், எப்படி தேர்தல் தொடர்பான பரப்புரைகளை வாட்ஸ்-அப் அனுமதிக்கிறது" என கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், இந்த வாட்ஸ்-அப் செய்தி இந்தியர்களை தாண்டி உலகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த பிரசார செய்தி அனுப்பப்பட்டுள்ளது" என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

    • ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
    • தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தியுள்ளார்

    தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சாகேட் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், "ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக அவர் விமான படை ஹெலிகாப்டரை பயன்படுத்தினார்.

    தேர்தல் பரப்புரைக்காக செல்லும் போது அரசு ஹெலிகாப்டர், விமானத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறையைகளை மீறி உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "தேர்தல் விதிமீறலை காரணம் காட்டி இதே காரணத்திற்காக தான் 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த அரசு விமானத்தை ஒருவேளை பாஜக வாடகை எடுத்திருக்கலாம். ஆனால் மற்ற தலைவர்கள் அனைவரும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த விவிஐபி ஹெலிகாப்டரை பயன்படுத்தும் போது பிரதமர் மட்டும் விமான படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்துவதற்கான தேவை என்ன என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும் தேர்தல் தேதியை அறிவித்த போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே தற்போது பிரதமர் மீது விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கிறதா என்பதை பார்க்கலாம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

    குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மேற்கு வங்க மாநில டிஜிபி ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்யும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கூடுதலாக, மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பொது நிர்வாகத் துறையின் செயலாளர்களும் தங்கள் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ஏற்கனவே 3 ஆண்டுகள் பணிபுரிந்த மாவட்டங்கள் மற்றும் சொந்த மாவட்டங்களில் இருந்து இடமாற்றம் செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கும் விடுதியில் நமாஸ் செய்து வந்துள்ளனர்.
    • பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    குஜராத் பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வடநாட்டு மாநிலங்களில் முஸ்லீம் மக்கள் மீது அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் ரம்ஜான் பண்டிகை வரவிருப்பதை ஒட்டி, இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களால் நோன்பு நோற்கப்படுகிறது.

    அந்த வகையில், குஜராத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கும் விடுதியில் நமாஸ் செய்து வந்துள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் பல்கலைக்கழக தங்கும் விடுதி அருகில் மசூதி எதுவும் இல்லை என கூறப்படுகிறது. மசூதி எதுவும் இல்லாத காரணத்தால் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே நமாஸ் செய்து வந்துள்ளனர்.

    அப்படி நமாஸ் செய்யும் போது, அங்கு வந்த கும்பல் மாணவர்களை சரமாரியாக தாக்கியது. மேலும், அவர்கள் நமாஸ் செய்த அறையில் இருந்த லேப்டாப், மொபைல் போன் மற்றும் இதர பொருட்களை உடைத்துள்ளனர். இதோடு அவர்களது இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஆப்பிரிக்க நாடுகள், ஆப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர் ஒருவர், "அவர்கள் எங்களை தாக்கினர். அறையில் வைக்கப்பட்டு இருந்த லேப்டாப்கள், மொபைல் போன்களை உடைத்து, இருசக்கர வாகனங்களையும் உடைத்தனர்.

    தாக்குதலில் ஆப்கானிஸ்தான், இலங்கை, தர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் காயமுற்றனர். காவல்துறையினர் வருவதற்குள் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து கிளம்பிவிட்டது. தாக்குதலில் காயமுற்ற மாணவர்கள் குறித்து அவர்களது தூதரகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது" என தெரிவித்தார்.

    இந்நிலையில், குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டதையடுத்து, அவர்கள் புதிய விடுதிக்கு மாற்றம் செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக துணைவேந்தர் நீரஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "குஜராத் பல்கலைக் கழக அதிகாரிகள், வெளிநாடுகளில் படிக்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் என்ஆர்ஐ விடுதி காப்பாளர் ஆகியோரை உடனடியாக மாற்றியமைத்துள்ளோம்.

    மூன்று நாள்களுக்குள் வெளிநாட்டு மாணவர்களை வெவ்வேறு விடுதிக்கு மாற்ற பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    குஜராத் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர் ஆலோசனைக் குழுவையும் அமைத்துள்ளது. இதில் வெளிநாட்டுப் படிப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், சட்டப் பிரிவின் உதவிப் பதிவாளர் மற்றும் பல்கலைக்கழக லோக்பால் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். என்று அவர் கூறினார்.

    ×