search icon
என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத் தலைவர் பதவி வழங்கிய ஜெகன்மோகன் ரெட்டிக்கு நடிகை ரோஜா நன்றி தெரிவித்துள்ளார்.

    திருப்பதி:

    நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கு ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவர் பதவியேற்று முதல் முறையாக நகரி தொகுதிக்கு வந்தார். அவரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரும், ஆதரவாளர்களும் வரவேற்றனர்.

    நகரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர், கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் ஏராளமான பைக்குகளில் ஊர்வலமாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.

    நகரியில் புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் முதல் அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் உருவச்சிலையை நடிகை ரோஜா திறந்து வைத்தார். அப்போது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என பொதுமக்கள் தீர்மானித்தனர். ஜெகன்மோகன்ரெட்டி ஆந்திராவில் பாதயாத்திரை மேற்கொண்டபோது, அவர் பொதுமக்களை நேரில் சந்தித்து பல நல்ல வாக்குறுதிகளை அறிவித்தார்.

    இதனால் தான் பொதுமக்கள் அவரை முதல் அமைச்சர் பதவியில் அமர வைத்துள்ளனர். பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வதில் ஜெகன்மோகன் ரெட்டியைப்போல் ஒரு தலைவர் யாரும் இருக்க முடியாது.

    நகரி தொகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இங்குள்ள இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். எனக்கு இந்த பதவியை வழங்கிய ஜெகன்மோகன் ரெட்டிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

    ஜெகன்மோகன் ரெட்டி

    இந்த பதவியில் நான் நியாமாக இருந்து பொதுமக்களுக்கு பல வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன். தொகுதியில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திரைப்பட இயக்குனரும், கணவருமான ஆர்.கே.செல்வமணி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், ஆதரவாளர்கள் பலர் உடனிருந்தனர். 

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயி இந்த நாட்டை ஆளக் கூடாதா? என்று கேள்வி எழுப்பினார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேவி குப்பத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று மாலை பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டப்பேரவை மாண்பை சீர்குலைத்தவர்கள் திமுகவினர். நாட்டை ஆள திமுகவுக்கு தகுதி இல்லை, முதல்வர் நாற்காலி மீது முக ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி. ஸ்டாலினுக்கு பிறகு உயதநிதி தான், உதயநிதிக்கு சட்டப்பேரவையிலேயே புகழ்பாடுகிறார்கள்.  

    கர்நாடகாவில் நடந்தது போல் தமிழகத்திலும் நடக்கும் என்கிறார் முக ஸ்டாலின். வீதியில் சட்டையை கிழித்துக்கொண்டு சென்றால் என்ன நினைப்பீர்கள்? விவசாயம் பற்றி ஸ்டாலினுக்கு தெரியாது. ஒரு விவசாயியாக மக்கள் முன் நிற்பது எனக்கு பெருமை. 

    வேலூர் தேர்தலை நிறுத்த நாங்கள் முயற்சிக்கவில்லை. வேலூரில் திமுகவினர் பதுக்கி வைத்திருந்த பணம் பிடிப்பட்டதால் தேர்தல் நிறுத்ததப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க திமுக தான் காரணம். சிறுபான்மையின மக்களின் குரல் மேலவையில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக பதவி கொடுத்துள்ளோம். 
    முக ஸ்டாலின்
    திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. அதிமுகவை உடைக்க முயற்சிப்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இங்கு பெரும்பான்மை ஆட்சி நடைபெற்று வருகிறது. நல்லது நினைத்தால் பதவி கிடைக்கும். கிராமப் பகுதிகளில் நூறுநாள் வேலை திட்டம் தொடரும். 

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
    ஆட்சியை மாற்ற நாங்கள் என்ன குமாரசாமியா? என்று வேலூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். 

    தமிழகத்தில் அரை மணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என்று நினைப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமியா? நாங்கள் நினைத்தால் அரசியலில் இருந்து ஸ்டாலினை வெளியேற்ற முடியும். ஆட்சி அமைக்க முக ஸ்டாலினுக்கு ஜாதகம் பொருத்தம் இல்லை. வாரிசு அரசியலால் திமுகவிற்கு இனி வளர்ச்சி இருக்காது. டெல்லி சென்றுள்ள திமுக எம்பிக்கள் காந்தி சிலை முன் போராட்டம்தான் நடத்துகின்றனர்.
    முக ஸ்டாலின்
    இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
    டெல்லியில் 2 நாட்கள் நடத்திய போராட்டத்தால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றாது என்று பி.ஆர்.பாண்டியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    திருச்சி:

    தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் புதுடெல்லியில் அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 300 விவசாயிகள், கடந்த 25 மற்றும் 26-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி உண்ணாவிரதம் , பாராளுமன்ற முற்றுகை போராட்டங்களை நடத்தினர்.

    மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்தில் தீர்மான கடிதத்தையும் கொடுத்தனர். விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, டெல்லியில் இருந்த தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.க்கள், புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    புதுவை முதல்வர் நாராயணசாமி

    கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 300 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். அதன் பிறகு 2 நாள் போராட்டத்தை முடித்துக்கொண்ட விவசாயிகள் சென்னை புறப்பட்டுள்ளனர். 31-ந்தேதி அவர்கள் சென்னைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே தஞ்சைக்கு திரும்பிய ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, 2 நாட்கள் போராட்டம் வெற்றிக்கரமாக அமைந்தது. அனைத்து தரப்பினரையும் இந்த போராட்டம் சென்று சேர்ந்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் எங்கள் கோரிக்கை தீர்மானத்தை கொடுத்துள்ளோம். எங்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த பலர் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை டெல்டா மாவட்டத்தில் நிறைவேற்றாது என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

    ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இனி டெல்டா பகுதிகளில் புதிதாக எண்ணை குழாய்களை பதிக்க உள்ளே வராது. தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்தால் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். கூட்டணியை பற்றி எங்களுக்கு கவலை கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாசின் முத்துவிழா பொதுக்கூட்டம் தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடந்தது. மாநில துணை பொதுசெயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். வடக்கு மண்டல இணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தி தமிழ்நாடு முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடைகளை மூடியவர் நமது நிறுவனர். அடுத்த 20 வருடங்களில் நாட்டில் என்ன நடக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப திட்டங்களை செய்வார்.

    இன்று காலநிலை மாற்றம் பற்றி பேசுகிறார்கள். மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையில் குடிக்க தண்ணீர் இல்லை. ஐரோப்பாவில் 42.6 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் நிலவுகிறது. உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    இதை முன்பே உணர்ந்து தான் பசுமை தாயகம் அமைப்பை தொடங்கி பல்லாயிரக்கணக்கான மரங்களை நட்டுள்ளார்.

    சமூக நீதிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி பல இட ஒதுக்கீடுகளை பெற்று தந்திருக்கிறார். 3 இடஒதுக்கீடுகளை பெற்று தந்த ஒரே தலைவர் நமது தலைவர். இடஒதுக்கீடு என்பது சலுகை கிடையாது. அது மக்களின் உரிமை.

    ஆட்சிக்கு வர வேண்டும், பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் நமக்கு கிடையாது.

    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஏமாந்து விட்டீர்கள். 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி என ஸ்டாலின் சொன்னதை நம்பியா ஓட்டு போட்டீர்கள்? அவரால் என்ன செய்ய முடியும். அவர் எதிர்க்கட்சி தலைவர். அவரால் சட்டசபையில் தினமும் வெளிநடப்பு தான் செய்ய முடியும்.

    நீங்கள் இன்னும் வெகுளியாக இருக்கிறீர்கள். நன்றாக சிந்தியுங்கள். 17 ஆண்டுகளாக வரைவு அறிக்கை தாக்கல் செய்த ஒரே கட்சி பா.ம.க. 2001-ல் இருந்து மாதிரி பட்ஜெட் போட்டுக் கொண்டிருக்கிறோம்.

    தேர்தல் அறிக்கையில் பல்வேறு நல்ல திட்டங்களை கூறி இருந்தோம். ஆனால் 1 இடத்திலும் வெற்றியை மக்கள் தரவில்லை.

    எங்களை பொறுத்தவரை கூட்டணிக்காக தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கூறி உள்ளோம். அதற்காக நாங்கள் எந்த அளவுக்கும் பாடுபடுவோம். அதையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்தால் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். கூட்டணியை பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. நாங்கள் அடையாளத்துக்காக கட்சி நடத்தவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாஜகவுக்கு நான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவு அளிக்க மதசார்பற்ற ஜனதாதள கட்சி எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

    இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பாஜகவுக்கு நான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது. மஜத எம்.எல்.ஏக்கள், கட்சி தொண்டர்கள் இதுபோன்ற வதந்திக்கு செவி சாய்க்க தேவையில்லை. பாஜகவுக்கு ஆதரவு என்ற தகவல் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது.

    மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் கட்சியை வலுப்படுத்துவோம். சாமானிய மக்களுக்கான எங்களின் போராட்டம் தொடரும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    மும்மொழிக் கொள்கைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, அதை வாபஸ் பெறவைத்தது திமுக தான் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மக்களவை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

    படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க குடியாத்தம் கே.வி.குப்பம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை வேலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.  

    நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதாக கூறுகிறீர்கள். நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றியதாக நான் கூறுகிறேன். மும்மொழிக் கொள்கைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, அதை வாபஸ் பெறவைத்தது திமுக தான். சூழ்ச்சியை, சதியை மக்கள் முறியடித்துள்ளார்கள். ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் என்ன ஆகும் என்பது தெரியும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    திமுக தலைவர் ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
    வாணியம்பாடி

    வேலூர் மக்களவை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், ஏசி சண்முகத்திற்கு ஆதரவாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- “  ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 

    மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று தெரியவில்லை. பொய் வாக்குறுதி என்ற மிட்டாயை மக்களிடம் கொடுத்து பொய்யான வெற்றி பெற்றது திமுக. 

    இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் தமிழகம் விஞ்ஞான உலகமாக இருக்கும். எத்தனை லட்சம் மக்கள் வீடில்லாமல் இருந்தாலும் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும். அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார். 
    முக ஸ்டாலின்
    ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. திமுகவின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று தெரியவில்லை. தமிழகத்தில் மிகவும் உயர்தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிகமானோர் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு" என்றார். 
    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

     அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினர் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    ஏ.சி.சண்முகம்


    இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2 -ம் தேதி என 3 நாள் பிரசாரம் செய்ய உள்ளார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணியம்படி, ஆம்பூர், கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம் அணைக்கட்டு வேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் தொடங்கும் 27-ந்தேதி கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 
    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் காங்கிரஸ் பார்வையாளர்களாக சிரஞ்சீவி, முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. டி.என்.முருகானந்தம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிரஞ்சீவி ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    இவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. முனிரத்தினம் தலைமையிலான தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து பணியாற்றுவார்கள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார்.

    வேலூர் தொகுதியில் பிரசாரம் நடந்துவரும் நிலையில் 10 நாள் வாடகை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வீட்டின் உரிமையாளர்கள் உயர்த்தி உள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினர் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    வெளி மாவட்டத்தில் இருந்து தேர்தலுக்காக வந்துள்ளவர்கள் தங்குவதற்கு தனியார் திருமண மண்டபம், விடுதி, ரெசிடென்சி ஆகியவை முன்பதிவு ஆகிவிட்டது. இதனால் அரசியல் கட்சியினர் தங்குவதற்கு வீடுகளை குறிவைக்கின்றனர். 10 நாள் வாடகைக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வீட்டின் உரிமையாளர்கள் கேட்கின்றனர்.

    பிரசாரத்திற்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் வீட்டின் உரிமையாளர் கேட்கும் பணத்தை கொடுத்து அரசியல் கட்சியினர் தங்குகின்றனர். பண்ணை வீடுகளுக்கு கிராக்கி அதிகமாக உள்ளது. அந்த வீடுகளை அரசியல் கட்சியினர் ஆர்வமாக கேட்கின்றனர். சிலர் அரசியல் பிரமுகர்களுக்கு வீடு கொடுக்க தயங்குகின்றனர். ஏதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று வீடு கொடுக்க மறுக்கின்றனர்.

    ஆம்பூர் என்றாலே பிரியாணிக்கு பெயர் பெற்றது ஆகும். ஏற்கனவே ஆம்பூரில் பிரியாணி வியாபாரம் நன்றாக இருக்கும். தற்போது வெளியூர் நபர்கள் ஆம்பூரில் வந்து குவிந்துள்ளதால் அனைத்து பிரியாணி ஓட்டல்களிலும் வியாபாரம் சக்கை போடு போடுகிறது. வியாபாரம் அதிகரித்துள்ளதால் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்யும் அரசியல் பிரமுகர்கள் மதிய உணவுக்காக ஆம்பூர் பிரியாணியை தேடி செல்கின்றனர்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர்ஆனந்த் வெற்றி பெறச் செய்திட உரிய அனைத்து முயற்சிகளையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மேற்கொண்டுள்ளது.

    வேலூர் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட உள்ளிட்ட தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, தி.மு.க. மற்றும் தோழமை கட்சி தோழர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளனர்.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா எம்.பி. வருகிற 30-ந்தேதி மாலை ஆம்பூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தேசியக்குழு உறுப்பினர், விடுதலை போராட்ட வீரர் தோழர் ஆர்.நல்லகண்ணு 31-ந்தேதி வேலூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தேசியக்குழு உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தா.பாண்டியன் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி மாலை வாணியம்பாடியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

    மாநில செயலாளர் முத்தரசன் வரும் 26-ந்தேதி மாலை 4 மணி முதல் மேல்பட்டி, பேரணம்பட்டு, குடியாத்தம், மெத்தேரி மற்றும் கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் வேன் மூலம் பிரசாரம் செய்திட உள்ளார்.

    ×