search icon
என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    நேற்று நடைபெற்ற வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் வாக்குப்பதிவு 72.62 சதவீதம் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தல்களை ஒப்பிடும்போது இது 3 முதல் 4 சதவீத வாக்குகள் குறைவாகும்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நேற்று நடந்தது. இதில் 72.62 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது.

    சட்டமன்ற தொகுதி வாரியாக, வேலூரில் 67.05 சதவீதம் பதிவாகி இருக்கிறது. அணைக்கட்டில் 75.04, கே.வி.குப்பத்தில் 82.62, சதவீத வாக்குகள் பதிவாகின. குடியாத்தம் தொகுதியில் 68.9 சதவீதமும், ஆம்பூரில் 70.51 சதவீதமும், வாணியம்பாடியில் 73.22 சதவீதமும் பதிவானது.

    கடந்த தேர்தல்களை ஒப்பிடும்போது இது 3 முதல் 4 சதவீத வாக்குகள் குறைவாகும்.

    வேலூர் மக்களவை தொகுதியில் 72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

    வேலூர் மக்களவை தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. காலையில் மந்தமாக இருந்த வாக்குபதிவு மதியத்திற்கு பின் விறுவிறுப்படைந்தது. 6 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளருக்கு டோக்கன்கள் வழக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் 72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கை 9-ந்தேதி நடப்பதாகவும் கூறினார்.
    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 62.94 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டு வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 7.40 சதவீதமாக இருந்தது.

    அதன்பின்னர் பகல் 11 மணி நிலவரப்படி 14.61 சதவீதம் வாக்குகள் பதிவானது. மதியம் 1 மணி நிலவரப்படி 29.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

    ஓட்டு போடுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்

    தற்போது, மாலை 5 மணி நிலவரப்படி 62.94 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு விவரம் வருமாறு:-

    குடியாத்தம் -67.25%

    அணைக்கட்டு -67.61%

    கே.வி.குப்பம் -67.1%

    வேலூர் -58.55%

    ஆம்பூர் -65.17%

    வாணியம்பாடி -52%
    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பகல் 1 மணி நிலவரப்படி 29.46 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டு வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 7.40 சதவீதமாக இருந்தது.

    வேலூர் தொகுதி

    11 மணி நிலவரப்படி 14.61 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    1 மணி நிலவரப்படி 29.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

    சட்டமன்ற தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு விவரம் வருமாறு:-

    வேலூர் 24.73 சதவீதம், அணைக்கட்டு 27.14 சதவீதம், கே.வி.குப்பம் 30.75 சதவீதம், குடியாத்தம் 32.43 சதவீதம், வாணியம்பாடி 30.21 சதவீதம், ஆம்பூர் 31.48 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    வேலூர் தேர்தலில் காலை 9 மணிவரை சராசரியாக 7.40 % அளவிற்கு வாக்குகள் பதிவாகி உள்ளன.
    வேலூர்:

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.  பண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 39 தொகுதிகளில், தேனி தொகுதியை தவிர மற்ற 37 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

    இந்த நிலையில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.  இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

    வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை நடைபெறும்.  வாக்கு எண்ணிக்கை 9ந்தேதி நடக்கிறது.

    வேலூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 1,351 பேர் ஆண்கள், 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேர் பெண்கள், 105 பேர் மூன்றாம் பாலினத்தினர்.  இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளன.

    வாக்காளர்கள் அனைவரும் பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களை காட்டி ஓட்டுப்போடலாம்.  இந்த நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்கு சாவடிகளுக்கு ஆர்வமுடன் சென்று வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

    இதனிடையே, குடியாத்தம் 6.79, அணைக்கட்டு 6.10, வாணியம்பாடி 6.29, வேலூர் 8.79, கே.வி. குப்பம் 8.85 மற்றும் ஆம்பூர் 7.76 சதவீதம் என்ற அளவில் வேலூர் மக்களவை தொகுதிகளில் அடங்கியுள்ள 6 சட்டசபை தொகுதிகளில் வாக்குகள் பதிவாகி உள்ளன. வேலூர் தேர்தலில் காலை 9 மணிவரை சராசரியாக 7.40 % வாக்குகள் பதிவாகி உள்ளன.
    வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் கூறினார்.
    வேலூர்:

    வேலூர் மக்களவை தொகுதிக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

    வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வள்ளலார் நகரில் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    எந்த வேலையாக இருந்தாலும் ஒத்திவைத்துவிட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது என்பது நமது ஜனநாயக கடமை. 100 சதவிகித வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும்.

    வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூர் தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

    நெல்லை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    பாராளுமன்றத்தில் பல சட்டங்களை பா.ஜ.க. அவசர கதியில் நிறைவேற்றி வருகிறது. இதனால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பல மொழி பேசும் 125 கோடி மக்கள் வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். பா.ஜ.க. கொண்டு வரும் சட்டங்களினால் மதசார்பின்மை தன்மை கொண்ட நம்நாடு சிதையும் அபாயம் உள்ளது.

    மிக பெரிய எண்ணிக்கையில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும் அம்பேத்கார் உருவாக்கிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். கொள்கையை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் நிலைக்குழு கமிட்டியை அமைக்கவில்லை. தேசிய கல்வி கொள்கையால் அனைத்து மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். 22 மொழி பேசும் இந்தியாவில் இந்தி, சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

    மத்திய அரசு சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது. தமிழக அரசு மக்கள் நலனுக்காக பாடுபடவில்லை. மத்திய அரசு சொல்வதை செய்கிறது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி 2017-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த ஆண்டே அது திரும்பி வந்தது. ஆனால் இதுகுறித்து தமிழக அரசு கூறவில்லை.

    இதற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் மத்திய அரசு நிதி வரவில்லை. மேலும் சாலை மற்றும் குடிநீர் மேம்பாட்டு நிதி ரூ.3726 கோடியை தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளது. தமிழக அரசு செயல்படாமல் உள்ளது.

    நீட்

    மத்திய அரசு நினைத்தால் ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்தது போல் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அவசர சட்டம் கொண்டு வரலாம். வருகிற 14, 15, 16-ந்தேதிகளில் தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு மாநில குழு கூட்டம் நடக் கிறது. இதில் தேசிய செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இதே போல் அக்டோபர் மாதம் நெல்லையில் 2, 3, 4-ந் தேதிகளில் மாதர் சங்கத்தின் தமிழக மாநாடு நடக்கிறது. இதில் கனிமொழி எம்.பி. உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். வேலூர் தொகுதி தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். அந்த தொகுதியில் சில பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல் பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தல் நாளை திங்கட்கிழமை நடக்கிறது. ஓட்டு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது.

    இதற்காக 1553 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 7500 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். 3752 ஓட்டு பதிவு எந்திரங்களும், 1876 கன்ட்ரோல் யூனிட்டுகளும், 1876 விவிபேட் எந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.

    வாக்கு பதிவு எந்திரம் மற்றும் தேர்தல் பொருட்கள் அனைத்து அந்தந்த தொகுதி தாலுகா அலுவலகத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று அங்கிருந்து வாக்கு பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வேலூர் பாராளுமன்ற தேர்தலில் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து ஆயிரத்து 351 பேரும், பெண்கள் வாக்காளர்கள் 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 105 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

     

    வேலூர் தொகுதி

    தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர். அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை.

    அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முதல்- அமைச்சர் பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 30 அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குகளை சேகரித்தார்.

    வேலூர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1,600 பேர் கொண்ட 20 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 ஆயிரம் போலீசாரும், 400 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்றியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. துணை ராணுவத்தினரும் அங்கு பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க 114 பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ‘‘உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடியே 57 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், ரூ.89 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 890 கிராம் தங்கம், ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 13 கிலோ 800 கிராம் வெள்ளி, 23 ஆயிரத்து 350 லிட்டர் மதுபானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஆம்பூரில் திருமண மண்டபத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

    அந்த மண்டபத்தில் திருமண ஏற்பாடுகளை செய்திருப்பதாக கூறி சம்பந்தப்பட்ட ஒரு குடும்பத்தினர் மனு அளித்தனர். இதனை ஏற்று, நேற்று மாலை 6 மணி அளவில் தற்காலிகமாக 'சீல்' அகற்றப்பட்டு திருமணம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்ததும் மீண்டும் மண்டபத்துக்கு 'சீல்' வைக்கப்பட உள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது.

    வேலூரில் அ.தி.மு.க. சார்பில் இறுதிகட்ட பிரசாரமாக தொரப்பாடியில் தொடங்கி சத்துவாச்சாரி வரை வாகன பேரணி நடந்தது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம், அமைச்சர் செங்கோட்டையன் உள்பட பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    தி.மு.க. சார்பில் வேலூர் மண்டித் தெருவில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கே.சி.அழகிரி, வைகோ, முத்தரசன், ரங்கராஜன், திருமாவளவன், காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா, பாலகிருஷ்ணன், பங்கேற்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் இருசக்கர வாகன பேரணி நடந்தது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வருகிற 9-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகிறது. 9 மணியில் இருந்து முன்னணி நிலவரம் தெரியவரும்.

    வேலூர் தேர்தல் முடிந்ததும் காலியாக உள்ள நாங்குனேரி, விக்கரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலின் போது நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்றதால் மே 27-ந் தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாங்குநேரி தொகுதி காலியிடமாக உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதியும் காலியாக உள்ளது.

    இந்த 2 தொகுதிகளுக்கும் வேலூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தப்படும் என்று முதலில் எதிர் பார்க்கப்பட்டது.

    ஆனால் வேலூருக்கு மட்டும் தேர்தல் கமி‌ஷன் தேர்தலை அறிவித்தது. 2 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    வேலூர் தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை 9-ந் தேதி நடக்க உள்ளது.

    வேலூர் தேர்தல் முடிந்ததும் காலியாக உள்ள நாங்குனேரி விக்கரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

    டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளை பட்டியல் எடுத்து அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) கடைசியில் தேர்தல் நடத்தலாமா? என்று ஆலோசித்துள்ளனர்.

    இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கூறுகையில், பாராளுமன்ற இடைத்தேர்தல் 9-ந் தேதியுடன் முடிந்துவிடுவதால் அதன் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் காலியாக உள்ள சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.

    தமிழகத்தை பொறுத்த வரை மே, ஜூன் மாதத்திலேயே 2 தொகுதி காலியாகி விட்டது. நவம்பர் மாதத்திற்குள் இங்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

    தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவ மழை காலம் என்பதால் அதற்கு முன்கூட்டியே இடைத்தேர்தலை நடத்தி முடிக்க (செப்டம்பர்) திட்டமிட்டுள்ளோம்.

    இது குறித்து மாநில அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் மாதத்தில் திருவிழா, போன்ற நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் இடைத்தேர்தலை நடத்தி முடித்துவிடலாம் என கருது கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க., அ.தி.மு.க.வினர் வேலூர் தொகுதியில் லட்சச்கணக்கில் செலவு செய்து விட்டு அவரவர் ஊர்களுக்கு இப்போது தான் திரும்பி உள்ளனர். இந்த நிலையில் அடுத்த மாதம் நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு தேர்தல் வந்தால் செலவுக்கு எங்கே போவது? என்று அரசியல் கட்சியினர் விழிபிதுங்கி உள்ளனர்.

    வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. வெளியூர்காரர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நாளை மறுதினம் 5-ந்தேதி நடக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் களத்தில் உள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் பல்வேறு துறைகளை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வெளியூரை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் வேலூர் மாவட்டத்தில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    தி.மு.க.வில் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள், வெளிமாவட்ட பிரமுகர்களும் வேலூருக்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் 3 நாட்கள் பிரசாரம் செய்தனர்.

    தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் வீதம் 2 கட்டங்களாக பிரசாரம் செய்தார். 

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமிக்கு ஆதரவாக சீமான் சட்டசபை தொகுதி வாரியாக பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

    கடந்த 5-ந்தேதி தொடங்கிய வேலூர் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. 

    வேலூர் தொகுதியில் தங்கியுள்ள வெளியூர் காரர்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதை மீறி தங்கியிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

    தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 7500 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

    மேலும் வாக்குப்பதிவு முடிந்ததும் எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவு நாளான 5-ந்தேதி 20 கம்பெனி துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    வருகிற 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. அன்றே தேர்தல் முடிவு வெளியாகும். ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் வரும் 11-ந்தேதியன்று வாபஸ் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இடைத்தேர்தலில் தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் ஆன்மீக பூமி என்பதை பெருமாளும், அத்திவரதரும் நிரூபித்து வருகின்றனர். ஆன்மீகம் தழைத்தோங்க வேண்டும் என்கிற கொள்கையோடு பாரதிய ஜனதா கட்சி களத்தில் இறங்கி உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகின்றோம். உறுப்பினர் சேர்க்கை எங்களுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தரும். மொத்தம் எவ்வளவு பேர் சேர்ந்துள்ளனர் என்பது குறித்து வருகிற 11-ந்தேதி முழுமையாக தெரிவிக்கப்படும்.

    மோடி அரசு தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மருத்துவ காப்பீடு திட்டம், செல்ல மகள் சேமிப்பு திட்டம், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. இடைத்தேர்தலில் தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது.

    முக ஸ்டாலின்

    சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. உட்கட்சி பூசல் காரணமாக கொலைகள் அரங்கேறி வருகிறது. தி.மு.க. மீது தொண்டர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

    புதிய கல்வி கொள்கை, முத்தலாக் உள்ளிட்ட சட்டத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் மத்தியில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் தூத்துக்குடியில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினைக்கு உரிய அழுத்தம் கொடுத்து வருகிறோம். உள்ளாட்சி தேர்தல் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இஸ்லாமிய பெருமக்களை திருமண மண்டபத்தில் ஸ்டாலின் சந்தித்து பேசினார் என்ற காரணத்திற்காக அவர் மீது போலீசார் வழக்கு போடப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலசெயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகின்றார்.

    ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில், தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.

    இதனை சகித்து கொள்ள இயலாத ஆளும் அ.தி.மு.க., தனக்குள்ள ஆட்சி அதிகாரத்தை அதிகாரிகள் மூலம் தவறாக பயன்படுத்தி, வழக்குகளின் மூலம் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

    இஸ்லாமிய பெருமக்களை திருமண மண்டபத்தில் ஸ்டாலின் சந்தித்து பேசினார் என்ற காரணத்திற்காக, மண்டபத்தை மூடி சீல் வைத்துள்ளனர்.

    மேலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர்ஆனந்த், தோல் தொழிற்சாலை உரிமையாளர் பரிதாபாபு, ஜமாத் நிர்வாகி ஜக்ரியா ஆகிய நால்வர் மீதும் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

    இத்தகைய நடவடிக்கையை மிக வன்மையாக கண்டிப்பதுடன் மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டதால் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு இடர் ஏற்படும்.

    ஆதலால் சீல் அகற்றப்பட்டு மண்டபத்தை திறப்பதுடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×