search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சேலம் மாவட்டத்தில் அதிகளவில் வெயில் நிலவி வருவதால் அடிக்கடி வனப்பகுதியில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.
    • வனத்துறையினர் விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    குறிப்பாக வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். மேலும் ஏப்ரல், மே மாதங்களில் சமவெளி பகுதிகளில் வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்க அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    ஏற்காடு பகுதியில் கோடை விழா மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில் அங்கு நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக வனப்பகுதிகள் அனைத்தும் காய்ந்து கிடக்கிறது.

    மரங்களில் இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. தற்போது சேலம் மாவட்டத்தில் அதிகளவில் வெயில் நிலவி வருவதால் அடிக்கடி வனப்பகுதியில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது. வனத்துறையினர் விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை ஏற்காடு மலைபாதை 8 வது கொண்டை ஊசி வளைவில் உள்ள வனப்பகுதியில் மீண்டும் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. அந்த தீ மளமளவென பரவி சுமார் 4 ஏக்கர் பரப்பளவிற்கு எரிந்தது. இதனால் மலைப்பாதை முழுவதும் ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது.

    இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க கடுமையாக போராடினர் ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் தீ கொளுத்தி விட்டு எரிந்தது.

    இதையடுத்து சேலத்தில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மலைப்பாதையில் இருபுறமும் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 5 மணிநேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வெப்பத்தை தணித்தனர்.

    காட்டுத்தீ காரணமாக மலை பாதை முழுவதும் புகையும் சாம்பலுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    • பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் இயல்பைவிட 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து, வாட்டி வதைக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் கோரத் தாண்டவத்தை பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 5 டிகிரி வரை வெப்ப அலை அதிகரித்து வெயில் உக்கிரமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    'எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கிவிடலாம், ஆனால் ஒரு மழைக்கு நம்மால் தாங்க முடியாது' என்ற பேச்சு இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு மழையை தாங்கிவிடலாம் போல, ஆனால் இப்போது அடிக்கும் வெயிலை தாங்க முடியவில்லை என்று சொல்லும் நிலை வந்துவிட்டது. அந்தளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்வதுதான் ஒரே வழி. அதற்கு பல தரப்பில் இருந்து அறிவுரைகள், பாதுகாப்பு வழிமுறைகள் தெரிவிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் வானிலை ஆய்வு மையமும் கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? எதை செய்ய வேண்டும்? எதனை செய்யக் கூடாது? என்ற வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    * தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரை முடிந்தளவு அடிக்கடி குடிக்க வேண்டும்.

    * லேசான, வெளிர் நிறம் மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி எடுத்துச் செல்வது அவசியம்.

    * பயணத்தின் போது தண்ணீர் பாட்டில்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.

    * மயக்கம் மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.


     

    * சர்க்கரை-உப்பு கரைசல், வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்சி, வடிகஞ்சி, எலுமிச்சை தண்ணீர், மோர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இவைகள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

    * வெளியில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ விட்டுவிடக்கூடாது.

    * வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்கலாம்.

    * குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.

    இதுமட்டுமல்லாமல், வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நபருக்கு வெப்பத்தால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆகவே அதுபோன்ற நபருக்கு முதலுதவி சிகிச்சை எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது பற்றியும் ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

    அதன்படி, வெப்பத்தின் தாக்கத்தால் சோர்வடையும் நபரை நிழலின் கீழ் படுக்க வைக்கவேண்டும். ஈரத்துணியால் அவரை துடைத்து கழுவ வேண்டும். சாதாரண வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை தலையில் ஊற்றலாம். அவருடைய உடல் வெப்பநிலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சர்க்கரை - உப்பு கரைசல், எலுமிச்சை சர்பத் ஆகியவற்றை வழங்கலாம். அதன் பின்னர் அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    • மெரினா கடற்கரையில் தினமும் பாதுகாப்பு பணிக்கு குதிரைப்படை அனுப்பப்படுகிறது.
    • குதிரைப்படை சென்னை போலீசில் முக்கிய பிரிவாக நாளுக்கு, நாள் உருவெடுத்து வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகர போலீஸ்துறையில் குதிரைப்படை போலீஸ் பிரிவும் ஒரு அங்கமாக இருக்கிறது. மிகப்பெரிய பாரம்பரியத்தை உள்ளடக்கிய குதிரைப்படை போலீஸ் பிரிவு நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகி வருகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் 1926-ம் ஆண்டு 54 குதிரைகளுடன் சென்னை போலீசின் ஒரு அங்கமாக குதிரைப்படை பிரிவு தோற்றுவிக்கப்பட்டது.

    அந்த கால கட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் குதிரைகளைத்தான் பயன்படுத்துவார்கள். ரோந்து செல்வதற்கு குதிரைப்படைதான் பேருதவியாக இருந்தது. தற்போதும் குதிரைப்படை சென்னை போலீசுக்கு உற்ற துணையாக செயல்படுகிறது.

    மெரினா கடற்கரையில் தினமும் பாதுகாப்பு பணிக்கு குதிரைப்படை அனுப்பப்படுகிறது. சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களின்போது இந்த குதிரைகளின் கண்கவர் அணிவகுப்பு நடைபெறுகிறது.

    விநாயகர் சிலை ஊர்வலம் போன்ற முக்கியமான நிகழ்வுகளிலும் குதிரைப்படை போலீசார் முக்கிய பங்காற்றுகிறார்கள். சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சியில் போலீஸ் அரங்கில் பொதுமக்களை கவரும் வகையில் வண்ண உடை அலங்காரத்தில் இந்த குதிரைகள் நிறுத்தப்படுவதும் வழக்கம்.

    தற்போது சென்னை போலீஸ் குதிரைப்படை விளையாட்டுகளிலும் பங்கேற்கிறது. சமீபத்தில் போலீஸ் குதிரை விளையாட்டு போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை போலீஸ் குதிரைப்படையை சேர்ந்த குதிரைகள் சாகசங்களை நிகழ்த்தி வெற்றி வாகை சூடி பதக்கங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் குதிரைப்படை சென்னை போலீசில் முக்கிய பிரிவாக நாளுக்கு, நாள் உருவெடுத்து வருகிறது.


     

    தற்போது சென்னை குதிரைப்படை போலீசில் 12 பெண் குதிரைகளும், 13 ஆண் குதிரைகளும் என 25 குதிரைகள் உள்ளன. சென்னை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் குதிரைப்படை பிரிவு செயல்படுகிறது. இங்கு 40 குதிரைகள் இடம் பெறும் வகையில் வசதி வாய்ப்புகள் உள்ளது. நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ள இந்த தருணத்தில் புதிதாக மேலும் 5 குதிரைகள் சேர உள்ளது.

    டெல்லியில் உள்ள ராணுவ முகாமில் இருந்து புதிய குதிரைகளை லட்சக்கணக்கில் விலை கொடுத்து வாங்க உள்ளனர். நூற்றாண்டு விழாவை காண உள்ள குதிரைப்படை போலீஸ் பிரிவை புதுப்பொலிவுடன் சீரமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.

    அதன் மூலம் புதிதாக குதிரை லாயங்கள் கட்டப்படுகின்றன. பழைய லாயங்கள் இடிக்கப்படுகிறது. இந்த குதிரைப்படை பிரிவு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் நேரடி மேற்பார்வையில் தலைமையக கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர், இணை கமிஷனர் கயல்விழி, துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. குதிரைப்படையை சிறப்பாக செயல்படுத்த இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் தலைமையில் 2 பெண் போலீசார் உள்பட 19 போலீசார் பணியில் உள்ளனர்.

    குதிரைகளை பராமரிப்பதற்கு தனியாக பராமரிப்பாளர்கள் இருக்கிறார்கள். 8 வயதில் குதிரைகள் வாங்கப்படுகின்றன. அவற்றிற்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. 20 வயது வரை குதிரைகள் போலீசில் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றன. 20 வயது நிரம்பியவுடன் அந்த குதிரைகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது. பின்னர், சென்னையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

    அந்த தொண்டு நிறுவனத்தில் வாழ்ந்து குதிரைகள் தங்களை ஆயுட் காலத்தை முடித்துக் கொள்கின்றன. குதிரைப்படையின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வருகிற 28-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்.
    • தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    கோடை காலம் தமிழ்நாட்டில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயிலின் கொடுமை நாளுக்குநாள் அதிகரிக்கிறது.

    அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    அந்தவகையில் நேற்று முன்தினம் சேலத்தில் 108 டிகிரியும், அதற்கு முந்தைய நாள் ஈரோட்டில் 109 டிகிரியும் என வெயில் தன்னுடைய கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. இது மேலும் வரக்கூடிய நாட்களிலும் அதிகரித்தே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை எச்சரிக்கும் விதமாக இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரித்தால் விடுக்கப்படக்கூடிய 'மஞ்சள் எச்சரிக்கை' தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி, வருகிற 28-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் எனவும் எச்சரித்து இருக்கின்றனர்.

    இதில் இன்று (வியாழக்கிழமை) திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

    பொதுவாக வானிலை ஆய்வு மையம் வெயிலின் அளவை செல்சியஸ் என்ற அளவிலேயே குறிப்பிடுகிறது. அதனை 'பாரன்ஹீட் டிகிரி' என்ற அளவில் மாற்றுகிறோம். அந்த வகையில் மேற்சொன்ன செல்சியஸ் அளவின் படி பார்க்கும் போது, இயல்பைவிட 5 டிகிரி முதல் 9 டிகிரி வரை வெப்பம் அதிகரித்திருக்கும்.

    அதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 வட மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 4 முதல் 7 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    மற்ற இடங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 100.4 டிகிரி வரை வெயில் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமரின் இந்த பேச்சுக்களை தேர்தல் ஆணையம் வேண்டுமானால் கண்டு கொள்ளாமல் இருக்கலாம்.
    • நாட்டு மக்கள் பாராளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-:

    முதல்கட்ட தேர்தலில் தனக்குச் சாதகமான சூழல் இல்லாததை உணர்ந்த பா.ஜ.க. தற்போது நடக்கும் பிரசாரத்தில் மதக்கலவரத்தை தூண்டி வாக்கு சேகரிக்க முனைந்துள்ளது.

    இதன் உச்சகட்டமாக பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில் நடைபெற்ற பிரசார பேரணியில் ஆற்றிய உரையில் தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கி உள்ளார். இஸ்லாமியர்கள் மீதான பிரதமர் மோடியின் இந்த வெறுப்பு பேச்சு உலகின் பல்வேறு நாடுகளில் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

    பிரதமர் மோடி பேசி இருப்பது அவரது சிந்தையில் நிறைந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.கோட்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. காலம் காலமாக ஆர்.எஸ்.எஸ். இந்துத் துவா மதவெறி கும்பல் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து, இந்துராஷ்டிரம் அமைக்க முனைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    எனவேதான் ஆர்.எஸ்.எஸ். தொட்டிலில் வளர்ந்த நரேந்திர மோடி, நாட்டின் பிரதமர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்த பிறகும் தனது ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பைக் கக்கி உள்ளார். இது கடும் கண்டனத்துக் குரியது.

    பிரதமரின் இந்த பேச்சுக்களை தேர்தல் ஆணையம் வேண்டுமானால் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நாட்டு மக்கள் பாராளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    ஆட்சி அதிகாரத்திலிருந்து பா.ஜ.க. தூக்கி எறியப்படும் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகம், கர்நாடகம், ஆந்திரா 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக வேப்பனபள்ளி உள்ளது.
    • உரிய ஆவணங்களின்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றாலோ, பரிசு பொருட்கள் கொண்டு சென்றாலோ பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மூன்று மாநில எல்லைப்பகுதியான வேப்பனபள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் கடந்த 19-ந்தேதி, பாராளுமன்ற தேர்தல் முடிந்தது. கர்நாடகத்தில் நாளை மறுநாள், மே 7 என 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அதேபோல ஆந்திராவில் சட்டசபை, பாராளுமன்ற தேர்தல் மே 13-ல், நடக்கிறது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரா 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக வேப்பனபள்ளி உள்ளது.

    எனவே வேப்பனபள்ளி அருகில், கர்நாடக மாநில எல்லையில் உள்ள நேரலகிரி சோதனைசாவடி, அத்திகுண்டா சோதனை சாவடி, வேப்பனபள்ளிஅடுத்த ஆந்திர மாநில எல்லையிலுள்ள ஒ.என்.கொத்தூர் சோதனைசாவடி உள்ளிட்டவற்றில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி உரிய ஆவணங்களின்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றாலோ, பரிசு பொருட்கள் கொண்டு சென்றாலோ பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மூன்று மாநில எல்லைப் பகுதிகளிலும் தீவிரமாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எத்தனை முறை சோதனையிடுவீர்கள் என சலித்து கொண்டவாறு செல்கின்றனர்.

    • 350 கிராம் அளவுள்ள தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது சாம்பார் சாதம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ரூ.50-க்கு விற்கப்படுகிறது.
    • தெற்கு ரெயில்வே அளவில் 34 ரெயில் நிலையங்களில் இந்த குறைந்த விலை உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மதுரை:

    தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2-ம் வகுப்பு பொதுப் பெட்டிகளில் பயணம் செய்யும் ரெயில் பயணிகளுக்கு சுகாதாரமான, சுவையான உணவு வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ரெயில் நிலையங்களில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகள் நிற்கும் இடங்களில் குறைந்த விலை உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    250 கிராம் அளவுள்ள தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம் அல்லது பருப்பு கிச்சடி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ஊறுகாயுடன் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல 350 கிராம் அளவுள்ள தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது சாம்பார் சாதம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ரூ.50-க்கு விற்கப்படுகிறது. 325 கிராம் பூரி, பஜ்ஜி ஆகியவை ஊறுகாயுடன் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 200 மி.லி. குடிநீர் பாட்டில் ஒன்று ரூ.3-க்கு விற்கப்படுகிறது. ரெயில் நிலையங்களில் குறைந்த கால அளவில் நின்று செல்லும் ரெயில்களில் பொதுப்பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    உணவைத்தேடி அங்கு மிங்கும் பயணிகள் அலைந்து செல்லாத வகையில் பொதுப்பெட்டிகளுக்கு அருகிலேயே நடைமேடைகளில் இந்த விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வே அளவில் 34 ரெயில் நிலையங்களில் இந்த குறைந்த விலை உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்திய ரெயில்வே அளவில் 100 ரெயில் நிலையங்களில் 150 விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய முறை விற்பனைக்கு பொதுபெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காயம் அடைந்த கோபி, கண்ணன் ஆகிய 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணப்பாறை:

    திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 57). இவரது மனைவி விஜயலட்சுமி(51). இவர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓவர் சியராக வேலை பார்த்து வருகிறார். இவரது சகோதரர் கண்ணன் (47).

    இவர்கள் 3 பேரும் ஒரு காரில் சிவகாசியில் நடைபெறும் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக இன்று காலை புறப்பட்டு சென்றனர். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சியை அடுத்த யாகபுரம் அருகே கார் சென்றபோது திடீரென கார் கட்டுபாட்டை இழந்தது.

    எதிர்பாராத விதமாக கார் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோபி, கண்ணன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த கோபி, கண்ணன் ஆகிய 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கண்ணன் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. கோபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து விஜயலட்சுமி, கண்ணன் ஆகிய 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொடைக்கானலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த வேன், கார் மீது நேருக்கு நேர் மோதியது.
    • இந்துஜா, அம்பிகாபதி, அனிதா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    திருக்கோவிலூர்:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வடிவேல், மோகன்ராஜ், ஜோதி, இந்துஜா, அம்பிகாபதி, அனிதா. இவர்கள் 6 பேரும் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் முடித்து இன்று அதிகாலை காரில் புறப்பட்டனர். இந்த கார் தியாகதுருகம் சாலையில் உள்ள பொன்னியந்தல் அருகே அதிகாலை 6 மணிக்கு சென்று கொண்டிருந்தது.

    அப்போது கொடைக்கானலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த வேன், கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கி, அதில் பயணம் செய்த வடிவேல், மோகன்ராஜ், ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், இந்துஜா, அம்பிகாபதி, அனிதா ஆகியோர் படுகாயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வேன் ஓட்டுனர் திருவண்ணாமலை கோரிமேட்டு தெருவை சேர்ந்த ஜலாலுதீனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா கே. சென்னம்பட்டி கிராம பகுதியில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் இறைச்சி கழிவுகளை சுத்திகரித்து உரமாக மாற்றும் பணி நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கடந்த வாரம் தேர்தலை புறக்கணித்த நிலையில் மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் மதுரை மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக அறிக்கை கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் சம்மந்தப்பட்ட தொழிற்சாலை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுவதாக தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் இந்த தொழிற்சாலை நிரந்தரமாக மூடக்கோரி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இந்த பகுதி சேர்ந்த அ.தி.மு.க.வினர், பொதுமக்களுடன் சேர்ந்து கள்ளிக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது தமிழக அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஆலையை மூடும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என்ற கண்டன கோஷமிட்டனர்.

    இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது-

    சென்னம்பட்டி ஆவல் சூரன்பட்டி பேய்குளம் உள்ளிட்ட 30 கிராம மக்களை அச்சுறுத்தும் இந்த தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக ஏற்கவே நான் கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலையை நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு கொடுத்தேன்.

    தற்போது மக்கள் ஜனநாயக உரிமையை நிலை நாட்டும் வகையில் அரசின் கவனத்தை ஈர்க்க தேர்தலை புறக்கணித்தார்கள். நானும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினேன். தற்போது தற்காலிகமாக மூடிவிட்டு, பிறகு ஆய்வறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    ஆனால் ஓட்டுபதிவின் போது இந்த ஆலை இயங்குவதாக மக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். இதை நிரந்தரமாக அகற்ற மக்கள் போராடி வருகிறார்கள். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போது இந்த தொழில் சாலையால் மக்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை, வேலைவாய்ப்பு இல்லை, பொருளாதாரம் இல்லை. மக்களுக்கு கேடு விளைவிக்கும் இந்த தொழிற்சாலையை எங்கே வேண்டுமானாலும் மாற்றி கொள்ளட்டும். ஆனால் மக்களின் விருப்பத்துக்கு மாறாக இயங்கக் கூடாது நிரந்தரமாக மூட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது.
    • டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை.

    சென்னை :

    கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு சிறுவன் வலியால் துடிதுடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஸ்மோக் பிஸ்கட்டை(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

    * திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படலாம்.

    * திரவ நைட்ரஜன் உயிருள்ள திசுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது கடுமையான உறை பனியை ஏற்படுத்தும் அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளது.

    * திரவ நைட்ரஜனை குடிப்பதால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாயை சிதைக்கிறது.


    மேலும், உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது. டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேரலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனிடையே சென்னையில் திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் கட்டுப்பாடு காரணமாக சில நாட்கள் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதன் காரணமாக விற்பனை மந்தமாக இருந்தது.
    • தமிழ்நாட்டில் சாதாரண நாட்களில் 1 லட்சம் பெட்டி கொண்ட பீர் பாட்டில் விற்பனையாகும்.

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. பொதுவாக அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் தான் வெயிலின் உக்கிரம் இந்த அளவுக்கு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அதிலும் திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடி வருகின்றனர்.

    ஆனால் மது பிரியர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஜில் பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஜில் பீருக்காக கூட்டம் அலை மோதுகிறது.

    இதுபற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கட்டுப்பாடு காரணமாக சில நாட்கள் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதன் காரணமாக விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் இப்போது விற்பனை மளமளவென உயர்ந்து வருகிறது. வெயில் சுட்டெரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் இப்போது விதவிதமாக பீர் வகைகளை கேட்டு வாங்கி குடிக்கிறார்கள். அவர்களுக்காக எப்போதும் தட்டுப்பாடின்றி பீர் வழங்குகிறோம். சூப்பர் ஸ்டிராங்பீர், பிளாக் நைட் மேக்ஸ் சூப்பர் ஸ்டிராங் பிரிமீயம் பீர், பிளாக் பேர்ல் டிரிபிள் சூப்பர் ஸ்டிராங் பீர், கமாண்டோ சூப்பர் ஸ்டிராங் பீர் என பல்வேறு ரக பீர் வகைகள் டாஸ்மாக் கடைகளில் வழங்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் சாதாரண நாட்களில் 1 லட்சம் பெட்டி கொண்ட பீர் பாட்டில் விற்பனையாகும். ஆனால் இப்போது 1 லட்சத்து 40 ஆயிரம் பெட்டி பீர் விற்பனையாகி வருகிறது.

    40 சதவீதம் அளவுக்கு பீர் வகைகள் விற்பனை அதிகமாகி உள்ளதால் கூடுதலாக பீர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மே மாதம் இன்னும் விற்பனை அதிகமாகும் என்பதால் மதுபான தொழிற்சாலைகளில் மது உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×