search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் கட்டண உயர்வு: ரெயில் பயணத்துக்கு மாறும் பயணிகள்
    X

    பஸ் கட்டண உயர்வு: ரெயில் பயணத்துக்கு மாறும் பயணிகள்

    அரசு பஸ்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் ரெயில் பயணத்தை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரிசர்வே‌ஷன் செய்யாத பொதுப்பெட்டியில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
    சென்னை:

    அரசு பஸ்களில் திடீர் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    பஸ்களை விட ரெயில்களில் கட்டணம் குறைவாக இருப்பதால் ஏழை-நடுத்தர மக்கள் ரெயில் பயணத்திற்கு மாறி வருகிறார்கள்.

    சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து நகரப்பகுதியிலும் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு செய்வதற்கும், முன்பதிவு இல்லாமல் சாதாரண பெட்டியில் பயணம் செய்வதற்கும் மக்கள் ரெயில் நிலையங்களில் காத்து நிற்கிறார்கள்.

    ரெயில்களில் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணம் செய்யும் வசதி உள்ளதால் இதுவரையில் ரெயில் பயணத்தை விரும்பாதவர்கள் இப்போது முன் கூட்டியே பயணத் திட்டத்தை வகுக்கிறார்கள்.

    ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணத்தை விட அரசு பஸ்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் ரெயில் பயணத்தை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    ரிசர்வே‌ஷன் செய்யாத பொதுப்பெட்டியில் பஸ்சை விட பல மடங்கு கட்டணம் குறைவாக இருப்பதால் கூட்டம் அலைமோதுகிறது.

    சென்னையில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. வார இறுதி நாளான வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொதுவாக ரெயில்களில் கூட்டம் நிரம்பி காணப்படும்.

    ஆனால் தற்போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு எல்லா நாட்களிலும் ரெயில்கள் நிரம்பியவாறு செல்கின்றன. குறிப்பாக முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க முண்டியடித்து செல்கிறார்கள்.

    முன்பெல்லாம் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிக்க காத்து நிற்பவர்களின் எண்ணிக்கை 100 பேருக்குள்தான் இருக்கும். ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை அளவிட முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை செல்லும் ரெயில்களுக்கு தான் பயணிகள் கூட்டம் எப்போதும் காணப்படும். ஆனால் பஸ் கட்டண உயர்வுக்குப் பிறகு அனைத்து மார்க்கத்தில் செல்லும் ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகள் நிரம்பி வழிகின்றன.

    எழும்பூரில் இருந்து பகல் நேரத்தில் புறப்பட்டு செல்லக்கூடிய புதுச்சேரி பாசஞ்சர் ரெயில், திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் போன்ற வற்றில் கட்டுக்கடங் காத கூட்டம் இன்று காணப் பட்டது.

    ரிசர்வே‌ஷன் பெட்டி யிலும் பலர் நின்று கொண்டே பயணம் செய்தனர். முன் பதிவு இல்லாத சாதாரண பெட்டியில் நிற்க முடியாத அளவிற்கு கூட்ட நெரிசல் இருந்தது. இடம் பிடிப்பதற்கு பலமணி நேரத்திற்கு முன்பே மக்கள் வரத் தொடங்கி விட்டனர்.

    இதே போல சென்ட்ரல்- கோவை இடையே செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ், பெங்களூர் செல்லும் பிருந்தாவன், மைசூர் எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ், லால்பார்க் எக்ஸ்பிரஸ் போன்றவற்றிலும் முன்பை விட கூட்டம் நிரம்பி வழிகிறது.

    பகல் நேர ரெயில்களை விட இரவு நேரங்களில் செல்லும் ரெயில்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. பொதுப்பெட்டிகளில் வழி நெடுக பயணிகள் உட்கார்ந்து பயணிக்கின்றனர்.

    வாசல் பகுதியிலும், கழிவறைக்கு செல்லும் பாதையிலும் மக்கள் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான பயணத்திற்கு காரணம் பஸ் கட்டணத்திற்கும் ரெயில் கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடு அதிகமாக இருப்பதுதான்.

    சென்னையில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவு பஸ்சில் செல்ல ரூ.372 கட்டணமாகும். ஆனால் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணிக்க கட்டணம் ரூ.130.

    சேலத்திற்கு பஸ்சில் செல்ல ரூ.383 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரசில் ரூ.130 கட்டணமாகும். ரெயிலை விட பஸ்சில் 3 மடங்கு கட்டணம் அதிகமாக இருப்பதாக மக்கள் ரெயில் பயணத்தை நாடுகிறார்கள்.

    கோவைக்கு ரெயிலில் பொதுப்பெட்டியில் பயணிக்க ரூ.165 கட்டணம். அரசு பஸ்சில் ரூ.571 ஆகும். இதே போல மதுரைக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருநெல்வேலிக்கு அரசு பஸ்சில் புதிய கட்டணம் ரூ.695. ஆனால் ரெயிலில் முன்பதிவு செய்யாமல் செல்ல ரூ.200 டிக்கெட்டாகும். நாகர்கோவிலுக்கு அரசு பஸ்சில் ரூ.778. ரெயிலில் ரூ.375 கட்டணமாகும்.

    தஞ்சாவூருக்கு அரசு பஸ் புதிய கட்டணம் ரூ.394. ஆனால் ரெயிலில் ரூ.135 டிக்கெட்டில் செல்ல முடியும்.

    சாதாரண ஏழை-எளிய மக்கள் முன்பதிவு செய்யாமல் குறைந்த கட்டணத்தில் பயணிக்கவே விரும்புகின்றனர்.

    நெரிசலில் சிக்கி, கீழே அமர்ந்து தூக்கம் இழந்து பயணித்தாலும் பரவாயில்லை. கட்டணம் குறைவாக இருக்கிறதே. அதுபோதும். ஒருநாள் கஷ்டப்படுகிறோம். குடும்பமாக செல்லும் போது ரூ.2000 முதல் ரூ.3000 வரை செலவு மிச்சமாகிறது என்று பெரும்பாலான பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    பஸ்களில் இதுவரை பயணம் செய்த மக்கள் எல்லாம் ரெயில்களில் பயணிக்க தொடங்கியதால் ரெயில் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.

    மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையங்கள் கூட இப்போது ‘களை’ கட்டி விட்டது. பாஞ்சர் ரெயில்களில் கூட்டம் சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் ஒருசில பாசஞ்சர் ரெயில்கள் கூட்டமாக இருக்கும். மற்ற நேரங்களில் காலியாக ஓடும்.

    ஆனால் பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஓடக்கூடிய பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி செல்கின்றன. முன் பதிவு செய்யப்படாத பயணிகள் அனைத்து ரெயில்வே கோட்டங்களிலும் அதிகரித்துள்ளனர்.

    சென்னை கோட்டத்தில் மட்டும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட (20-ந்தேதி) நாளில் 4 லட்சத்து 47 631 பேர் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற்று பயணம் செய்துள்ளனர். இதுவே கடந்த ஆண்டு அதே நாளில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 960 ஆக இருந்துள்ளது. 43 சதவீதம் டிக்கெட் விற்பனை ஒரு நாளில் மட்டும் அதிகரித்துள்ளது.

    கடந்த வருடத்தில் அதே நாளை காட்டிலும் 1 லட் சத்து 35 ஆயிரம் பயணிகள் அதிகளவு பயணம் செய்துள்ளனர். பஸ் பயணிகள் ரெயில் பயணத்திற்கு மாறி இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாகும்.

    சென்னையை போல மதுரை, பாலக்காடு, சேலம், திருச்சி, திருவனந்தபுரம் கோட்டத்திலும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் விற்பனை அதிகரித்துள்ளது. #tamilnews
    Next Story
    ×