search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
    X

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

    பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சென்னை:

    பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெறக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஏழை, எளிய நடுத்தர மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் பஸ் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. 2 மடங்கு கட்டண உயர்வு ஏற்புடையது அல்ல. தமிழக அரசின் நிர்வாக திறமை யின்மையால் தான் அரசு பேருந்து கழகங்கள் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

    நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக கணக்கு தணிக்கை ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது.

    பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலத்துக்கு உரிய பங்கை உயர்த்தி பெற முயற்சிக்காமல் அந்த சுமையை மக்கள் மீது சுமத்துவது ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது.

    பஸ் கட்டண உயர்வு மக்கள் விரோத நடவடிக்கை ஆகும். தமிழக அரசு உடனடியாக கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, இரா.செல்வம், சேகுவாரா, எழில்கரோலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானது. ஆனால் அதற்காக அப்பாவி மக்கள் மடியில் கை வைப்பது கண்டிக்கத்தக்கது.

    போக்குவரத்து தொழிலாளர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்காக பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தி விட்டது.

    பஸ் கட்டண உயர்வை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் நாளை மற்ற மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 27-ந் தேதி தி.மு.க. நடத்தும் போராட்டத்திலும் பங்கு பெறுவோம்.



    போக்குவரத்து கழகம் சம்பாதிக்க வேண்டும் என்று அரசு கருதுகிறது. அது தவறானது. போக்குவரத்து கழகத்தை அரசு துறையாக மாற்ற வேண்டும். பஸ் ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கினால் பின்னடைவை சரி செய்ய முடியும்.

    பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது என்று அமைச்சர் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது.

    இது மக்கள் போராட்டமாக வெடிக்கும். அதனால் பஸ் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×