search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவலாளி கழுத்தில் அரிவாளை வைத்து கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
    X

    காவலாளி கழுத்தில் அரிவாளை வைத்து கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

    புதுக்கோட்டை அருகே காவலாளி கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி கூட்டுறவு வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையடுத்து நேற்று முன்தினம் மதியம் ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். வங்கி காவலாளியான அப்பகுதியை சேர்ந்த மகிமைராஜ் (வயது 50) என்பவர் காவல் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்றிரவு அவர் வங்கி முன்பு படுத்திருந்தார். அப்போது வங்கியின் பின்புற சுவர் உடைக்கப்படுவது போன்ற சத்தம் கேட்டது. உடனே எழுந்த மகிமைராஜ் டார்ச் லைட்டை அடித்துக் கொண்டு வங்கியின் பின்புற பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

    அப்போது அங்கு மர்ம நபர்கள் 5 பேர் வங்கியின் சுவரில் துளை போட்டு கொண்டிருந்தனர். அதிர்ச்சியடைந்த மகிமை ராஜ் அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் கையில் அரிவாள் வைத்திருந்த மர்ம நபர்கள், மகிமைராஜின் கழுத்தில் அரிவாளை வைத்து, சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.

    இதனால் பயந்து போன அவர் அங்கேயே அமர்ந்தார். 2 பேர் அவரின் கழுத்தில் அரிவாளை வைத்து நிற்க, 3 பேர் வங்கி சுவரில் துளை போடும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனிடையே அப்பகுதிக்கு சிறுநீர் கழிப்பதற்காக பொது மக்கள் சிலர் வந்தனர். அவர்கள் வங்கியின் பின்புறம் இருந்து சத்தம் வருவதை கேட்டு அங்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது மர்ம நபர்கள் நிற்பதை பார்த்து உடனே திருடன், திருடன் என்று சத்தம் போட்டனர். இதையடுத்து அப்பகுதி வீடுகளில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் பலர் எழுந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் மர்ம நபர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், டி.எஸ்.பி. ஆறுமுகம், கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் வங்கியில் இருந்து சிறிது தூரம் ஓடி அங்குள்ள புதர் பகுதியில் நின்று விட்டது.

    கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றவர்கள் இந்தியில் பேசியுள்ளனர். எனவே அவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. பொதுமக்கள் சுதாரித்து செயல்பட்டதன் காரணமாக வங்கியில் இருந்த ரூ.3 கோடி நகை-பணம் தப்பியது. இல்லையென்றால் அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பார்கள்.

    இது குறித்து வங்கி மேலாளர் ஆபேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    Next Story
    ×