search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: தி.மு.க. கோரிக்கை
    X

    புதுவையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: தி.மு.க. கோரிக்கை

    புதுவையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    தி.மு.க. துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனையின் பணிகள் மிக சிறப்பாக உள்ளது. ஆனால் சிறு சிறு குறைபாட்டால் அது பெரிய குறையாக தெரிகிறது. உதாரணத்திற்கு 108 ஆம்புலன்ஸ் சேவையில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றை தெரிந்தும் தெரியாததுபோல் உள்ள அதிகாரிகளை கண்டிக்கிறேன்.

    நமது மாநிலம் ஒரு யூனியன் பிரதேசம். நமது மாநிலத்தில் அனைத்தும் தனித்துவம் வாய்ந்தது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் சேவையை ஏன் சென்னையோடு இணைத்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    108 ஆம்புலன்சை விபத்து நடந்த இடத்திற்கு வரவழைக்க 108 எண்ணை தொடர்பு கொண்டால் அந்த எண்ணின் சேவை முதலில் சென்னையில் உள்ள டி.எம்.எஸ். அலுவலகத்திற்கு செல்கிறது. பின் அவர்கள் நமது புதுவை மாநிலத்தில் உள்ள 108 அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு சென்னையிலிருந்து தெரிவிக்கின்றனர்.

    அதன்பின் இங்குள்ள அலுவலர் 108 ஆம்புலன்ஸ் டிரைவரை தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடத்தை கூறுவதால் அந்த இடத்திற்கு சென்றடைய குறைந்தது அரை மணி நேரம் அல்லது போக்குவரத்து நெரிசல் காரணமாக நேரம் அதிகமாகிறது. அதன்பின் அங்கு சென்றால் டிரைவரை வசைபாடுவதும், குறை கூறுவதும் சில நேரத்தில் டிரைவரை தாக்கும் சூழலும் ஏற்படுகிறது.

    மேலும் பல இடத்தில் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்ககூட யாரும் முன்வருவது இல்லை. ஒருவரால் மட்டும் எப்படி தூக்க முடியும்? அதனால் மற்ற மாநிலத்தில் ஒரு 108 ஆம்புலன்சில் டிரைவர், மருத்துவ டெக்னிஷியன் மற்றும் அட்டெண்டர் ஆகிய குழு உள்ளது.

    ஆனால் நமது மாநிலத்தில் டிரைவர் மட்டும் உள்ளார். மருத்துவ குழு 108 ஆம்புலன்சில் இருந்தால் ஒரு சில நபர்களுக்கு முதலுதவி கொடுத்தாலே சகஜ நிலைக்கு வருவார்கள். டிரைவர் முதலுதவி மற்றும் மருத்துவம் செய்வதற்காக படித்து வரவில்லை. அவர்களுக்கு வாகனத்தை ஓட்ட மட்டும் தான் பணி அமர்த்தி உள்ளார்கள்.

    மேலும் 108 ஆம்புலன்சில் பணிபுரிபவர்களுக்கு, அரசு துறையில் எப்படி விடுமுறை வழங்கப்படுகிறதோ அதுபோல் இவர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும்.

    மேலும் இந்த டிரைவர்களுக்கு இ.பி.எப். பிடித்தம் செய்து இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×