search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலையீடு தவிர்க்க முடியாததா?- தலையங்கம்
    X

    தலையீடு தவிர்க்க முடியாததா?- தலையங்கம்

    நீதித்துறையில் எந்த தலையீடும் இருக்க கூடாது என்ற எண்ணம் மோடியிடம் இருக்கிறது. அதே நேரத்தில் அவரது கருத்துப்படி பார்த்தால் நீதித் துறையில் அரசு, அரசியல் தலையீடு இல்லாமல் இல்லை என்பதும் புலனாகிறது.
    சென்னை:

    நீதித்துறையில் அரசும், அரசியல் கட்சிகளும் தலையிட கூடாது என்று பிரதமர் மோடி ஆங்கில தொலைக்காட்சி பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

    இதைத் தானே மக்களும் எதிர்பார்க்கிறார்கள். பிரதமர் இப்படி பேசியது ஆதங்கமா? அதிருப்தியா? எதிர்பார்ப்பா? எந்த எண்ணத்தில் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டார் என்பது புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் புரிகிறது. நீதித்துறையில் எந்த தலையீடும் இருக்க கூடாது என்ற எண்ணம் அவரிடம் இருக்கிறது.

    அதே நேரத்தில் அவரது கருத்துப்படி பார்த்தால் நீதித் துறையில் அரசு, அரசியல் தலையீடு இல்லாமல் இல்லை என்பதும் புலனாகிறது.

    எந்த ஒரு பிரச்சனையை கையில் எடுத்தாலும் அதற்கு ஒரு பின்னணி இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள இந்த கருத்துப்படி பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அரசோ, அரசியல் கட்சிகளோ தலையீடு என்பது இருந்தே வருகிறது என்பதை யூகிக்க முடிகிறது.

    நீதித்துறை பொறுத்தவரை யாரும் தலையிட முடியாத இடம் என்பதே சாமானிய மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை உடைந்து வருகிறதா? இல்லை உண்மையிலேயே அரசும், அரசியல் கட்சிகளும் தலையிடுவதில்லை என்று நம்பலாமா?

    இந்த கேள்விக்கு மனசாட்சிப்படி பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உண்டு. காரணம் அரசு என்பதும் அரசியல் கட்சி என்பதும் ஒன்றுதான். ‘ஆட்சி’ நிர்வாகத்தை நடத்துவதும் அவர்கள்தான்.

    நாடு முழுவதும் எத்தனையோ வழக்குகள்... எவ்வளவோ தீர்ப்புகள் வெளிவந்துள்ளன. அதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். நீதித்துறை சொல்லும் தீர்ப்புக்கு மறுபேச்சு இல்லாமல் மக்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளுக்கு இடையே எழுந்து சர்ச்சைகள் பலவிதமான கேள்விகளுக்கு வித்திட்டது.

    அந்த பிரச்சனையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்றாலும் பிரச்சனைக்கான காரணம் என்ன? என்பது பல யூகங்களுக்கு வழிவகுத்து விடும் என்பதும் உண்மை.

    சாமானிய மக்கள் மீதான வழக்குகளும், அரசியல்வாதிகள் மீதான வழக்குகளின் தன்மை ஒரே மாதிரியாக இருந்தாலும் வழக்குகளின் போக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவது உண்டு.

    இவைகளை பார்க்கும்போதுதான் அரசும், அரசியல் கட்சிகளும் தலையிட கூடாது என்று சொன்னாலும் நடைமுறையில் சில வி‌ஷயங்கள் சில நேரங்களில் நெருடலாக தோன்றும்.

    கோர்ட்டுகளுக்கு ஒவ்வொரு ஆட்சி வரும்போதும் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவராகவோ அல்லது அந்த கட்சியின் அனுதாபியாகவோ இருப்பவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள்.

    எந்த வழக்காக இருந்தாலும் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு அல்லது கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை தான் அவர்கள் எடுக்க முடியும். தலைசிறந்த வழக்கறிஞராக இருந்தாலும் சட்டப்படி என்பதை விட அரசின் எண்ணப்படிதான் தன் தரப்பு வாதத்தை எடுத்து வைப்பார்.

    நீதித்துறை என்பதல்ல. பல துறைகளில் தலையீடு என்பது அதிகரிப்பதுதான் நாட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணம என்பதையும் மறுப்பதற்கில்லை.

    எத்தனையோ முறைகேடுகள், ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தபோது அதில் சம்பந்தப்பட்ட தலையீடுகளும் கூடவே வெளிவந்தது.

    அனைத்து நிர்வாகங்களும் சுயமாக இயங்க வேண்டும். அந்த நிர்வாகங்களுக்கு துணை நிற்பதுதான் அரசாங்கம்.

    ஆட்சியும், கட்சியும் எந்த நிர்வாகத்திலும் தலையிட கூடாது என்பதை கட்சிகள் சொல்வதை விட அதையே கட்சிகளின் முதல் முக்கிய கொள்கையாக கடைபிடிக்க வேண்டும்.

    தற்கால அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியாக திகழும் மாபெரும் தலைவர்கள் எல்லாம் அப்படித்தான் வாழ்ந்து காட்டி சென்று இருக்கிறார்கள். அவர்களின் பெயரை பயன்படுத்தி மகிழ்ச்சி அடையும் கட்சிகள் அவர்களின் தூய செயல்பாடுகளையும் செயல்படுத்தினால் கூடுதல் மகிழ்ச்சி அடைய முடியும். #Tamilnews
    Next Story
    ×