search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2000 புதிய பஸ்களை விரைவில் போக்குவரத்து கழகம் வாங்க திட்டம்
    X

    2000 புதிய பஸ்களை விரைவில் போக்குவரத்து கழகம் வாங்க திட்டம்

    பஸ் கட்டண உயர்வு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் 2000 புதிய பஸ்களை அடுத்த மாதத்திற்குள் வாங்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    அரசு பஸ்களின் கட்டண உயர்வை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் பஸ் பயணிகளுக்கு எவ்வித வசதியும் செய்து தரப்படாததுதான். ஓட்டை உடைசல் பஸ்களில் பயணம் செய்வதால் பயண நேரம் அதிகமாக உள்ளது.

    குறிப்பிட்ட நேரத்திற்குள் சொந்த ஊருக்கு போய் சேர முடிவதில்லை. பெரும்பாலான பஸ்களின் இருக்கைகள் உடைந்து காணப்படுகின்றன. அதுவும் நீண்ட தூரம் செல்லக்கூடிய விரைவு பஸ்களின் நிலைமை மிகவும் பரிதாபமானது.

    இருக்கைகளை சாய்க்கவோ, சாய்ந்த இருக்கைகளை மீண்டும் நேர் செய்யவோ முடியாத நிலையில் பயணிகள் தினமும் பயணம் செய்கிறார்கள். ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் திறக்க முடியாமல் உள்ளன. பஸ்களை முறையாக பராமரிக்காததால் அடிக்கடி பழுதாகி வழியில் நின்று விடுகின்றன.

    அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் மட்டுமின்றி மற்ற போக்குவரத்து கழக பஸ்களும் மிகவும் மோசமான நிலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பஸ்களும் அதனுடைய ஆயுள்காலத்தை கடந்து இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் ஓட்டை உடைசலான பஸ்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது நியாயமா? என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

    தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகம் வசூலித்தாலும் அதற்கான வசதியை அவர்கள் தருவதாகவும், ஆனால் அரசு பஸ்களில் எந்த வசதியும் செய்து தராமல் கட்டணத்தை மட்டும் பலமடங்கு உயர்த்தி இருப்பது வேதனை அளிப்பதாக மனம் குமுறுகிறார்கள்.

    பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் பலரும் ரெயில் பயணத்தை அதிகளவு நாடிச் செல்கிறார்கள். மின்சார ரெயில்களில் மட்டுமின்றி நீண்டதூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் கூட 2 நாட்களாக கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் நின்று கூட பயணம் செய்ய முடியாத அளவிற்கு மக்கள் நெரிசலில் பயணிக்கின்றனர்.

    ரெயில் கட்டணம் குறைவாக இருப்பதால் பஸ் பயணிகள் பலரும் ரெயில் பயணத்திற்கு மாறி வருகின்றனர். வரும் காலங்களில் பஸ் பயணத்தை குறைக்கக்கூடிய நிலை ஏற்படும் என்று தெரிகிறது. வார இறுதியில் ஊருக்கு சென்றவர்கள் இனி அதனை தவிர்க்கலாம். மாதத்திற்கு ஒரு முறையோ, இருமுறையோ பயணத்தை தொடரலாம்.

    பஸ்சிற்கு செலவாகும் தொகையை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடக்கூடும் என்பதால் அரசு விரைவாக புதிய பஸ்களை வாங்க முடிவு செய்துள்ளது. 2016-ம் ஆண்டு 2000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு 2017-ல் நிதி ஒதுக்கியது. ஆனால் இதுவரையில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை.

    பஸ் கட்டண உயர்வு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையிலும் மோசமான நிலையில் ஓடக் கூடிய பஸ்களில் பயணம் செய்ய தயங்கும் பயணிகளின் மனநிலையை கருத்தில் கொண்டு 2000 புதிய பஸ்களை அடுத்த மாதத்திற்குள் வாங்க திட்டமிடுகிறது. ஓடத் தகுதியற்ற பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை இயக்குவதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    கட்டணம் உயர்த்தியும், பயணிகள் இல்லாமல் பஸ்கள் காலியாக சென்றால் உயர்த்தப்பட்டதற்கான பயன் இல்லை. அதனால் பஸ் பயணிகளை தக்க வைத்துக்கொள்ள அதிரடி நடவடிக்கையுயில் புதிய பஸ் திட்டத்தில் இறங்குகிறது.

    ரெயில், கார், ஆம்னி பஸ் பக்கம் நடுத்தர மக்கள் சென்று விட்டால் அரசு போக்குவரத்து கழகங்களின் நிலை மேலும் பரிதாபமாகிவிடும். அதனால் முதல் கட்டமாக புதிய பஸ்களை விரைவில் களத்தில் இறக்க முடிவு செய்துள்ளனர். #tamilnews

    Next Story
    ×