search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் கட்டணத்திற்கும் ஜி.எஸ்.டி. வரியா?: மேலும் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு
    X

    பஸ் கட்டணத்திற்கும் ஜி.எஸ்.டி. வரியா?: மேலும் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு

    மத்திய, மாநில அரசுகள் உத்தரவிடும் போது பஸ் கட்டணத்துடன் சரக்கு சேவை வரியை விதிக்கும் பட்சத்தில் கட்டணம் மேலும் அதிகரிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 8 போக்குவரத்து கழகங்கள் மூலம் 22,509 பஸ்கள் இயக்கப்படுகிறது. 1 லட்சத்து 40 ஆயிரத்து 615 பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். நாள் ஒன்றுக்கு 88.64 லட்சம் கி.மீ. தூரம் செல்லும் பஸ்களில் 2.02 கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள்.

    டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை அதிகரிப்பு, பராமரிப்பு மற்றும் இயக்க செலவு அதிகரிப்பு, பணியாளர்களுக்கான சம்பள உயர்வு போன்ற காரணங்களால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நாள்தோறும் ரூ.9 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது.

    இதனால் 19-ந்தேதி நள்ளிரவு முதல் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. நகர பேருந்துகள், மாநகர பேருந்துகள், புறநகர் பேருந்துகள், விரைவு பேருந்துகள், குளிர்சாதன சொகுசு பேருந்துகள், மலைப்பாதையில் செல்லும் பேருந்துகள் என அனைத்துக்கும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன் 2011-ம் ஆண்டு பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பிறகு பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 6 ஆண்டுகளுக்கு பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இது கர்நாடகம், ஆந்திரா, கேரளாவை விட குறைவு என்றும் கட்டண உயர்வை தவிர்த்த போதிலும் ரூ.20,488 கோடி நஷ்டத்தை சரிக்கட்டவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் பஸ் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    பஸ் கட்டண உயர்வால் அன்றாடம் பஸ்களில் பயணம் செய்யும் பொது மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. வருவாயில் பெரும் பகுதியை போக்குவரத்துக்கு செலவிட வேண்டி இருப்பதால் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    இந்த நிலையில் பஸ் கட்டணத்துக்கு எதிர்காலத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்றும், விழாக்காலம் மற்றும் வார இறுதி நாட்களில் இயக்கப்படும் விழாகால பஸ்களுக்கு வழக்கமான கட்டணத்தைப் போல 1½ மடங்கு அளவு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

    மாநகர பேருந்துகள், புறநகர் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள் என அனைத்துக்கும் கட்டணத்தை உயர்த்த தனித்தனி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.



    அதில் மத்திய-மாநில அரசுகள் உத்தரவிடும் போது பஸ் கட்டணத்துடன் கூடுதலாக சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜி.எஸ்.டி) வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. அதன்படி ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் போது பஸ் கட்டணம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.

    இது தவிர விழாக்காலங்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கும், வார இறுதி நாட்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கும் வழக்கமான கட்டணத்தைப் போல் 1½ மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் எதிர்காலங்களில் டீசல் விலை உயர்வு, இயக்கம் மற்றும் பராமரிப்பு செலவு, பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு போன்றவற்றை கணக்கிட்டு அதற்கு ஏற்ப உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவினால் மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதன் மூலம் டீசல் விலை உயரும் போதும் சம்பள உயர்வு காலங்களிலும் மற்ற விலை ஏற்றத்தின் போதும் அவ்வப்போது பஸ் கட்டண மும் உயர்த்தப்படலாம் என்பதை அரசு சூசகமாக தெரிவித்துள்ளது.

    பக்கத்து மாநிலங்களில் காப்பீடு மற்றும் சுங்கவரி ஆகியவை பஸ் கட்டணத்துடன் ஒரு பகுதியாக சேர்த்து வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அதுபோல வசூலிக்கப்படவில்லை. இதற்காக புதிதாக ஒருங்கிணைந்த நிதியம் உருவாக்க முடிவு செய்துள்ளது.
    Next Story
    ×