search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: தினகரன் பேட்டி
    X

    பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: தினகரன் பேட்டி

    பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் கூறினார். #BusFareHike #TTVDhinakaran
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி தொகுதி முன்னாள் எம்.பி. சுகுமாரின் மகன் டாக்டர் தினேஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பொள்ளாச்சியை அடுத்துள்ள சமத்தூரில் நடைபெற்றது.

    இதில் ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

    ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் பொதுமக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை அறிவித்து இருப்பது சாதாரண மக்களையும், ஏழை மக்களையும் பாதிப்படைய செய்யும்.

    இந்த கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.


    கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் பல பஸ் வழித்தடங்களுக்கு அதிபதியாகி விட்டதாக கூறப்படுகிறது.

    இதன் மூலம் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் லாபம் வரும் என்பதால் பஸ் கட்டணத்தை உயர்த்தி இருக்கலாம்.

    என்னை யாராலும் அச்சுறுத்த முடியாது. இன்னும் 2 மாதங்களில் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழும். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம்.

    நான் ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றதை ஏற்று கொள்ள முடியாமல் தி.மு.க.வினர் புகார் கூறி வருகின்றனர். அதை பெரிதாக நினைக்க வேண்டாம்.

    90 சதவீதம் தொண்டர்கள் எங்களுடன் தான் உள்ளனர். நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

    கொங்கு மண்டலத்தில் உள்ள தொண்டர்கள் ஆதரவு எங்களுக்கு அதிகமாக உள்ளது.

    சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியினர் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தார்களே தவிர மக்களின் நலனுக்கு எதையும் செய்யவில்லை.

    திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத் பிரபு டெல்லியில் மர்மமான முறையில் இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது தந்தையின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்.

    ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை நான் தான் வெற்றிவேலிடம் கொடுத்து வெளியிட சொன்னதாக திருச்சி ராஜசேகரன் தவறாக பேசி இருக்கலாம்.

    ஆர்.கே. நகர் தேர்தலில் ரூ. 20 டோக்கன் கொடுத்து நாங்கள் ஓட்டு வாங்கவில்லை. எடப்பாடி பழனிசாமி அணியினர் தான் ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுத்தனர். ஆனாலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TamilNews #TTVDhinakaran
    Next Story
    ×