search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரியில் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள் மோதி இளம்பெண்-பெயிண்டர் பலி
    X

    தர்மபுரியில் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள் மோதி இளம்பெண்-பெயிண்டர் பலி

    தர்மபுரியில் அடுத்தடுத்து நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம்பெண் மற்றும் பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள மாய பஜார் தெருவை சேர்ந்தவர் மாது. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா(வயது 35).

    நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் இவர்கள் இருவரும் சொந்த வேலை காரணமாக மொபட்டில் பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து சாமியாபுரம் கூட்டு ரோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கீரப்பட்டியானூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென மாதுவின் மொபட் பின் பகுதியில் வேகமாக மோதியது. இதனால் மொபட்டில் இருந்த கீதா கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது கணவர் மாதுவுக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதற்கிடையே மொபட் மீது மோதியவர்கள் இருவரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டனர். காயம் அடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இளம்பெண் கீதாவுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே கீதா பரிதாபமாக இறந்தார். பலியான இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தர்மபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் அருகே உள்ள பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகன் மணி (வயது 25). பெயிண்டர்.

    இவர் நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் பெரியாம்பட்டி பகுதியில் இருந்து தர்மபுரியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குண்டல்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக் கூடத்தின் அருகே மணி சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த மணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த மதிகோண்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து பெயிண்டர் மணி சாவுக்கு காரணமான டிரைவரையும், வாகனத்தையும் வலைவீசி தேடி வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×