search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹஜ் மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
    X

    ஹஜ் மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

    மத்திய அரசு ஹஜ் மானியத்தை மீண்டும் அறிவித்து சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். #GKVasan #TamilMaanilaCongress
    மதுரை:

    மதுரையில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் விவரங்களை அரசு சேகரிக்க வேண்டும். டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆலோசனை மையத்தை ஏற்படுத்த வேண்டும்.

    பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து முரண்பட்ட கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

    இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையம் குறித்த காலக்கெடுவுக்குள் உண்மையை கண்டறிந்து வெளிக்கொண்டு வர வேண்டும்.

    ஹஜ் மானியத்தை மத்திய அரசு நிறுத்தியது வரவேற்கத்தக்கதல்ல. நீதிமன்றம் படிப்படியாக தான் ஹஜ் மானியத்தை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது. ஆனால் மத்திய அரசு திடீரென்று ஹஜ் மானியத்தை நிறுத்தியுள்ளது. தற்போது இதற்கு என்ன அவசியம்?


    எனவே மத்திய அரசு ஹஜ் மானியத்தை மீண்டும் அறிவித்து சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற வேண்டும்.

    தமிழகம் முழுவதும் பொதுமக்கள், விவசாயிகளின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி வருகிற 29-ந் தேதி த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கும்பகோணத்தில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    உள்ளாட்சி வார்டுகளை மறு வரையறை செய்ததில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. தற்போது தேர்தலை நடத்தினால் அது ஒரு தரப்புக்கு சார்பாக அமையும். எனவே தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் வார்டு மறுவரையறையை செய்ய வேண்டும்.

    ஆண்டாள் குறித்து வைரமுத்து தனது கருத்தை கூறாமல் தவிர்த்திருக்கலாம். இந்த பிரச்சனையை வளரச்செய்வது வருத்தம் அளிக்கிறது. எனவே இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அதனை அங்கீகரிப்பது வாக்காளர் கையில் தான் உள்ளது.

    தமிழகத்தில் இனி எந்த ஒரு கட்சியும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது. தேர்தல் நேரத்தில் த.மா.கா. யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilNews #Vasan
    Next Story
    ×