search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல் உருவாக்கும் புதிய கூட்டணி - தென் இந்திய கட்சிகளை ஒருங்கிணைக்க திட்டம்
    X

    கமல் உருவாக்கும் புதிய கூட்டணி - தென் இந்திய கட்சிகளை ஒருங்கிணைக்க திட்டம்

    மத்திய அரசை வலுவாக எதிர்ப்பதற்கு தென் இந்தியாவில் உள்ள மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பது கமல்ஹாசனின் வியூகமாக உள்ளது. #Kamalhaasan #KamalhaasanPoliticalEntry #TNPolitics
    நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ந்தேதி ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து தொடங்குகிறார்.

    அதன் பிறகு அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். “மக்களின் ஆதரவோடு இந்த பயணத்தைத் தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திக்கிறேன்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



    நடிகர் ரஜினியும் அரசியலுக்கு வரும் சூழ்நிலையில், அவருக்கு முன்னதாக நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணத்துக்கு வந்திருப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது. கமல்ஹாசன் தொடங்கப் போகும் புதிய அரசியல் கட்சியின் பெயர் என்ன? அந்த கட்சியில் எந்தெந்த தலைவர்கள் முக்கிய இடத்தைப் பிடிப்பார்கள்? என்று மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.

    அதுபோல தமிழர்கள் நலனுக்கும் தமிழ்நாட்டின் நலனுக்கும், மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் கமல்ஹாசன் எத்தகைய கொள்கைகள், திட்டங்கள், தீர்க்கத் தரிசனத்துடன் அரசியல் களத்துக்கு வருகிறார் என்ற எதிர்பார்ப்பும் பெரும்பாலானவர்களிடம் நிலவுகிறது. தமிழ்நாட்டு அரசியலை புதுமையான, அதிநவீன பாதைக்கு அவரால் அழைத்து செல்ல முடியுமா? என்ற விவாதமும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் வார இதழ் ஒன்றில் தொடர் கட்டுரை எழுதி வரும் நடிகர் கமல்ஹாசன் அதில் இந்த வாரம், திராவிடம் பற்றிய தனது கருத்தை தெளிவுப்படுத்தியுள்ளார். திராவிடம் பற்றி அவர் கூறி இருப்பதாவது:-

    திராவிட இயக்கம் ஏதோ கெட்ட வார்த்தை போன்று சொல்கிறார்கள் சிலர். வேறு சிலரோ, அதைத் தவிர வேறு எதையும் பேச மாட்டோம் என்கிறார்கள்.

    திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மாத்திரம் அல்ல. நாடு தழுவியது. அதில் மிகப்பெரிய சரித்திரமும் ஆந்த்ரோபாலஜியும் இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியும் சம்பந்தப்பட்டு இருக்கிறது.

    திராவிடத்தை தென்னிந்தியா முழுவதும் கொண்டாடினால் இப்போது நாம் சொல்லும் இந்த பாரபட்சங்கள் இல்லாமல் போய் விடும். ஒட்டுமொத்தமாக ஒருங்கே ஒலிக்கும் கோரஸாக இங்கிருந்து டெல்லி வரை பேச முடியும்.

    சந்திரபாபு நாயுடுவும், பினராயி விஜயனும், சந்திரசேகரராவும், சித்தராமையாவும் திராவிடர்கள்தான். தமிழன் மட்டும் தான் திராவிடன் என்று உரிமை கொண்டாட வேண்டியது இல்லை.

    சந்தோ‌ஷமாக வெவ்வேறு மொழி பேசுபவர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ளலாம். இது என் கருத்து. இந்த கருத்து இன்னும் வேர் கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. அப்படி நினைக்க ஆரம்பித்தால் நமக்கு பல பலங்கள் கூடும்.

    இதை மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுர மண்ணிலிருந்து இந்தப் பயணத்தை பிப்ரவரி 21-ந்தேதியிலிருந்து தொடங்கலாம் என்று இருக்கிறேன்.

    இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் திராவிடம் பற்றி கூறியுள்ளார்.

    கமல்ஹாசன் கடந்த ஆண்டு கேரளா சென்று முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்துப் பேசினார். திராவிடம் பற்றிய தன் புதிய பார்வையின் ஒரு அங்கமாகத்தான் அவர் அன்று கேரள முதல்-மந்திரியை சந்தித்திருக்கக் கூடும் என்று பலரும் இப்போது கருதுகிறார்கள்.

    குறிப்பாக தென் இந்திய மாநிலங்களை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் புதிய நடவடிக்கைக்கு கமல்ஹாசன் திட்டமிட்டு இருப்ப தாக கூறப்படுகிறது.

    கமல்ஹாசனின் அரசியல் கனவுகளில் தென் இந்திய மாநிலங்கள் ஐந்தையும் ஒன்றுபடுத்துவதும் ஒன்று என தெரிகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களையும் ஒருமித்த கருத்துக்கு கொண்டு வருவதன் மூலம் பொருளாதார ரீதியாக தென் இந்தியாவை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று கருதுகிறார்.

    அது மட்டுமின்றி மத்திய அரசை வலுவாக எதிர்ப்பதற்கு தென் இந்தியாவில் உள்ள மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதும் கமல்ஹாசனின் வியூகமாக உள்ளது.

    திராவிடம் என்ற ஒரே சிந்தனையில் தென் இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களும் ஒன்றுபட்டு நின்றால், நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதோடு மத்திய அரசிடம் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை பிரித்து அரசியல் ரீதியிலான அதிகாரங்களையும் உரிய முறையில் பெற முடியும் என்று நினைக்கிறார். இதன் மூலம் மத்திய அரசுக்கு எதிராக வலுவான கூட்டணியையும் உருவாக்க முடியும் என்று கமல்ஹாசன் கருதுகிறார்.

    அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் வர உள்ளது. அதற்குள் அதாவது இன்னும் 15 மாதங்களுக்குள் தென் இந்திய மாநிலங்களை ஒரே கூட்டணியில் இடம் பெற செய்து விட வேண்டும் என்று அவர் திட்டமிட்டுள்ளார்.

    கமல்ஹாசனின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றி கூறுகையில், “தென்னிந்தியாவில் உள்ள 5 மாநிலங்களையும் ஒருங்கிணைத்து செயல்பட கமல்ஹாசன் மிகப்பெரியத் திட்டம் ஒன்று வைத்துள்ளார். இது பற்றிய முழு விபரங்களையும் அவர் அடுத்த மாதம் 21-ந் தேதி அன்று மாநில சுற்றுப் பயணத்தை தொடங்கும் போது வெளியிடுவார்” என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், “மத்திய அரசை எதிர்த்து செயல்பட கமல்ஹாசன் தென் மாநிலங்களை ஒன்றுபடுத்தி புதிய கூட்டணியை உருவாக்க எடுக்கும் முயற்சிக்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். பெரும்பாலானவர்களின் நலன் கருதி அனைவரும் ஒன்று சேர்வார்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது” என்றார்.

    ஆனால் அரசியல் ரீதியாக பார்க்கும்போது கமல்ஹாசனின் முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

    தென் மாநிலங்கள் ஐந்திலும் கர்நாடகாவில் காங்கிரஸ், கேரளாவில் கம்யூனிஸ்டு, தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவே 5 மாநில முதல்வர்களும் அரசியல் ரீதியாக ஒரே கூட்டணியில் வர வாய்ப்பில்லை என்கிறார்கள்.

    அரசியலைத் தவிர்த்து உரிய அதிகாரம், நிதி ஒதுக்கீட்டை பெற மத்திய அரசுக்கு எதிராக கை கோர்க்கும் வி‌ஷயத்திலும் 5 மாநில தலைவர்களிடம் ஒருமித்த கருத்து உருவாக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியே எனவே கமல்ஹாசனின் புதிய முயற்சி பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். #Kamalhaasan #KamalhaasanPoliticalEntry #TNPolitics  #tamilnews
    Next Story
    ×