search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவோணம் அருகே கம்யூனிஸ்டு பிரமுகர் கடத்தல் - இருதரப்பினர் மோதல்
    X

    திருவோணம் அருகே கம்யூனிஸ்டு பிரமுகர் கடத்தல் - இருதரப்பினர் மோதல்

    திருவோணம் அருகே கம்யூனிஸ்ட் பிரமுகரை முன்விரோத தகராறில் தாக்கியதால் இருதரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே வெட்டுவாக்கோட்டையை சேர்ந்த சிலர் நேற்று மாலை ஊரணிபுரத்திற்கு சென்றபோது அங்கு கடை வைத்துள்ள உஞ்சியவிடுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரது கடையில் பொருட்கள் வாங்கும்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து ஊருக்கு திரும்பி சென்ற அவர்கள் இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய தொழிலாளர்கள் விவசாய சங்க மாவட்ட தலைவர் வாசுவிடம் (வயது42) கூறியுள்ளனர்.

    இதனால் சமரசம் பேச சென்ற வாசுவுக்கும், பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களான உஞ்சிய விடுதி சேகர், முத்து, கருணாகரன், பெரியசாமி, பிரபாகரன், ராமமூர்த்தி ஆகிய 7 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாசு அங்கிருந்த கிளம்ப முயன்றபோது 7 பேரும் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கி, உஞ்சியவிடுதிக்கு கடத்தி சென்றனராம்.

    இதையறிந்த வெட்டுவாக்கோட்டை கிராமமக்கள் மற்றும் உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கடைவீதியில் திரண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது பட்டுக் கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் அரசு பஸ் வந்தபோது மறியலில் ஈடுபட்டவர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைந்தது. மேலும் அவ்வழியே வந்த ஒரு கார் கண்ணாடியையும் கல்வீசி உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பயணிகள் யாரும் காயமின்றி தப்பினர்.

    தகவலறிந்து அப்பகுதிக்கு கறம்பக்குடி, திருவோணம் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கடத்தி செல்லப்பட்ட வாசுவை மீட்கக்கோரியும், உஞ்சியவிடுதியை சேர்ந்த 7 பேரையும் உடனடியாக கைது செய்யக் கோரியும் கோ‌ஷமிட்டனர். இதையடுத்து போலீசார் சென்று வாசுவை மீட்டு அழைத்து வந்தனர். பாஸ்கர் உள்ளிட்ட 7 பேரும் தாக்கியதில் படுகாயமடைந்த வாசுவை 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் அரசு பஸ் டிரைவர் மகாதேவன் கறம்பக்குடி போலீசில் மறியலில் ஈடுபட்டவர்கள் கண்ணாடியை கல்வீசி தாக்கியதாக புகார் கொடுத்தார். இதேபோல் வாசுவும் திருவோணம் போலீசில் 7 பேர் மீதும் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தஞ்சை செந்தில்குமார், புதுக்கோட்டை செல்வராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆலங்குடி அப்துல்முத்தலீப், ஒரத்தநாடு பாரதிதாசன் ஆகியோர் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருவோணம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், யேசுதாஸ் மற்றும் கறம்பக்குடி, திருவோணம் போலீசார் 100-க்கும் மேற்பட்டோர் ஊரணிபுரம், திருவோணம் கடைவீதி மற்றும் நம்பிவயல் பகுதிகளில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×