search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனியில் அடுத்தடுத்து 7 கடைகளில் கொள்ளை
    X

    பழனியில் அடுத்தடுத்து 7 கடைகளில் கொள்ளை

    பழனியில் ஜவுளிகடை உள்பட 7 கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பழனி:

    பழனிக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் 24 மணிநேரமும் பரபரப்பாக இருக்கும். தற்போது தைப்பூச திருவிழா நடைபெற உள்ளதால் ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் பழனி கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பஸ்நிலையம் அருகே ரெயில்வேபீடர் ரோட்டில் ஏராளமான வணிகவளாகங்கள், ஜவுளிகடைகள் உள்ளன.

    நேற்று வியாபாரிகள் இரவு வேலை முடிந்து கடைகளை அடைத்து சென்றனர். நள்ளிரவில் மர்மநபர்கள் இப்பகுதியில் அடுத்தடுத்து உள்ள 7 கடைகளை உடைத்துள்ளனர். அங்குள்ள பேக்கரி கடையில் ரூ.30 பணத்தை முதலில் திருடினர்.

    பின்பு அருகில் இருந்த ஜவுளிகடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் ரூ.1.5 லட்சம் மற்றும் அதனை தொடர்ந்து மெடிக்கல்ஷாப்பில் ரூ,7500, செல்போன் கடையில் இருந்த 3 செல்போன், ரூ.18 ஆயிரம் ரொக்கம் என ஒரேஇரவில் 7 கடைகளில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இன்று காலை கடை திறக்க வந்த வியாபாரிகள் கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீபோல் பரவியது. இதனை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.

    பழனி டவுன்போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கொள்ளைபோன கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பழனியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    செயின்பறிப்பு, வீடுபுகுந்து கொள்ளை போன்ற சம்பவங்கள் அரங்கேறின. தற்போது நகரின் மையப்பகுதியில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கடைவீதியில் அடுத்தடுத்து 7 கடைகளில் கொள்ளை போன சம்பவம் பழனிநகர மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

    Next Story
    ×